மாற்றம் என்பது அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவின் உண்மையில் இருந்து தொடங்கவேண்டும்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
மாற்றம் என்பது அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவின் உண்மையில் இருந்து தொடங்கவேண்டும்! 

உண்மையில் ஆராய்ச்சி, ஆய்வு, அறிவியல் என்பதெல்லாம் என்ன? எமது போராட்டம் சார்ந்து நாம் என்ன செய்யவேண்டும், எவ்வாறு செயற்பட வேண்டும், எமது அடுத்த கட்டம் என்ன, நாம் என்ன செய்யப் போகிறோம்? என்று சிந்திக்கின்ற போது, அது குறித்து (மாற்றமடைந்துள் இந்த உலகில் நாம் மா(ற்)றவேண்டிய மாற்றம் குறித்து) அறிவியல்ரீதியாக ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற முடிவிற்கு வரமுடிகிறது. 

அப்படி அறிவியல்ரீதியாக ஆய்வுசெய்வது என்றால் என்ன? 
இன்று உலகில் உருவாக்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களும் ஒரு காலத்தில் ஒருவருடைய கற்பனையில் இருந்து, பிறகு அது பல முயற்சிகளுக்குப் பின் உருப்பெற்று நிஜவாழ்வில் நம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால்தான் பல சுய முன்னேற்றச் சிந்தனையாளர்கள், "கற்பனை செய்யுங்கள், அப்போதுதான் உங்கள் வாழ்வு வளமடையும்" என்று ஊக்கப்படுத்தினர்.

"அறிவியல் ஆய்வு" என்றால், தத்துவ மேதைகளின் விளக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்: 
சுமார் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மிலிடஸ் என்ற தீவில் வாழ்ந்த தேல்ஸ் என்பவர், "இந்த உலகம் எதனால் செய்யப்பட்டுள்ளது?" என்ற முதல் கேள்வியை கேட்டதாக வரலாறு சொல்கிறது. "இந்த உலகம் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பஞ்ச பூதங்களின் இணைவும் பிரிவும் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது" என்ற முடிவிற்கு அந்த மிலிடஸ் என்பவரும், பின் அவர் வழியில் வந்த தத்துவ ஆராய்ச்சியாளர்களும் நம்பிவந்தனர்.
அடுத்துவந்த தத்துவ ஆராய்ச்சியாளர்களில் பார்மினிடிஸ் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவருடைய தத்துவம், "உலகில் ஒரு பொருள் இருத்தல் (being), இல்லாதுபோதல் (nonbeing) ஆகிய இரண்டு நிலைகளே." என்றார். அவருடைய கருத்துப்படி, "ஒரு விடயம் இன்று நம் கண்முன்னே இல்லாமல் போகலாம். ஆனால், பிரபஞ்சத்திலேயே இல்லாமல் இருந்தால் அது நம் கற்பனையில் தோன்றுவதுகூட சாத்தியமில்லை; அதனால், நம் கற்பனையில் தோன்றும் ஒரு பொருளோ, விடயமோ நம் கண்முன்னே இல்லாவிட்டாலும் அது உண்மையாக இருப்பதால்தான், நம்மால் அதைப்பற்றி யோசிக்கவோ, பேசவோ முடிகிறது," என்பதை உலகிற்கு விளக்கிக் கூறினார்.

அவரைத் தொடர்ந்துவந்த தத்துவவாதிகள், "உலகை உணர்வால் அறிதல், உலகை அறிவால் உணர்தல்," என்று இரண்டு பிரிவுகளாகப் பார்க்கத் தொடங்கினர். இந்தப் பிரிவினையை உருவாக்க அடிப்படைக் காரணம், நாம் பார்க்கும் உலகின் நிலைமைதான். "மனிதனும் அவனைச் சுற்றியுள்ள உலகமும். ஒரு நேரம் இருப்பதுபோல் மற்றொரு நேரம் இருப்பதில்லை. எப்போதும் மாற்றமடைந்துகொண்டே இருக்கும் இந்த உலகத்தை, நம்மால் நம்ப முடியவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரமாக ஒரு சக்தி இருக்கவேண்டும். அந்த சக்தியை உணர்வதே உண்மையான அறிவு," என்று கருதினார் பார்மினிடிஸ். அந்த உண்மையான அறிவைப் பெற, நம் சிந்தனை அமைப்பை மாற்றவேண்டும் என்று நம்பினார். அந்த வகையில் நாம் இவரைத்தான் பகுத்தறிவின் தந்தை எனச் சொல்ல வேண்டும்.

தத்துவ மேதை சோக்ரடீஸ், "தான் வாழ்ந்த காலம் வரை எந்தத் தத்துவத்தையும், தான் கண்ட உண்மையாக முன்வைக்கவில்லை. மாறாக, தான் உலகில் உண்மையைத் தேடுவதாகவே," இறுதிவரை சொன்னார். சாகிரடீஸ், "நாம் உணரும் உலகத்தையும், அதைப்பற்றிய நம் அறிவையும் தாண்டி அந்தப் பொருளோ, விடயமோ இந்த உலகில் இருப்பதற்கு மேலும் ஓர் ஆதார காரணம் இருப்பதாக நம்பினார். ஒவ்வொன்றுக்கும் நிலையான அர்த்தம் இருப்பதாக," கூறினார்.

அவருடைய கருத்தில், "நீதி, தர்மம் என்பதை வரையறுக்க முடியும். அது காலத்தைப் பொறுத்து மாறாமல் என்றும் இருப்பது" என்றார். "உலகில் ஒரு மனிதன்கூட தர்மத்துடன் இல்லாவிட்டாலும், தர்மம் தன்னளவில் அழிந்துபோகாமல் இருக்கும் என்பது உறுதி," என்று சாக்ரடீஸ் நம்பினார். இந்த ஆதார உண்மையை அறிந்துகொள்வதே கல்வியின் நோக்கம் என்றார் சோக்ரடீஸ்.


சோக்ரடீசின் சீடரான பிளேட்டோவிற்கும் இந்த எண்ணத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. பிளேட்டோ, "உலகப் பொருள்களின் ஆதார உண்மையை அறிவது மட்டுமன்றி அதிலுள்ள முழுமையையும், பூரண நன்மையையும் அறிந்து அடைய வேண்டும்," என்று புதிய கருத்தை முன்வைத்தார். 

உலகில் எந்தப் பொருளும் முழுமையாகவும், பூரண நன்மை உடையதாகவும் இல்லை என்று எதார்த்தத்தில் அவருக்குத் தெரியும். அதனால், அவர் மற்றுமொரு கருத்தை முன்வைத்தார். "நாம் பார்க்கும், உணரும் உலகம் குறை உடையது; அழியும் தன்மையுடையது; அதனால், அது உண்மையான உலகம் இல்லை. ஆனால், இந்த உலகத்தைப் பற்றிய கற்பனைகளை உள்ளடக்கிய உலகம் இருக்கிறதே, அதுதான் உண்மையான (அறிவு) உலகம்," என்றார். 

பிளேட்டோவின் கருத்துப்படி, "உலகத்தில் தர்மத்தைக் கடைப்பிடிப்பது என்பது, இந்த அறிவைப் பெறுவதுதான். அவர் கூற்றுப்படி, ஒரு குதிரையைப் பார்ப்பதைவிட, அந்தக் குதிரையைப் பற்றிய அறிவு மேன்மையானது. உயிருள்ள குதிரை ஒருநாள் இறந்துபோகும்; ஆனால், குதிரை பற்றிய நம் அறிவு அழிவில்லாதது," என்றார் பிளேட்டோ.

அன்று பிளேட்டோ வகுத்த சித்தாந்தத்தின் அடிப்படையில்தான், இன்றுவரை மேற்கத்தியக் கல்விமுறைகள் அமைந்துள்ளன. பிளேட்டோவின் சீடரான அரிஸ்டோட்டில் இதே பாணியில் மேலும் பல தத்துவங்களை வகுத்து, இன்றைய கல்வித் துறையிலுள்ள பல கிளைகளை உருவாக்கி வழிகாட்டினார். இன்றைய அறிவியல் சிந்தனைக்கும் நம் பகுத்தறிவுக்கும் வித்திட்டவர்கள்தான் இந்த கிரேக்கத் தத்துவ மேதைகள். எந்தப் பொருளையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளாமல், அதில் உள்ள உண்மையை அறிய அறிவியல் ஆராய்ச்சி முறைகளை அரிஸ்டோட்டில் விளக்கியிருக்கிறார்.

"ஒரு அறிவியல் விதி என்பது உண்மை சொல்வதாகவும், மாறாததுமாகவும் இருக்க வேண்டும். ஒரு பொருளைப் பற்றிய அறிவியல் விதி உருவாக்கும் முன்பு, அதைப் பற்றித் தேவையான அளவு தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அப்படி சேகரித்த தகவல்களை நெடுங்காலம் கூர்ந்து கவனித்தபின், அந்தத் தகவல்களில் உள்ள ஒற்றுமையை உணர்ந்து, அதனை அறிவியல் விதியாகக் கொள்ள வேண்டும்," என்று அரிஸ்டோட்டில் விளக்குகிறார்.

இப்படிப் பல நூற்றாண்டுகளாய் இத்தனை அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் இந்த முறையில் தேடித்தேடிக் கிடைத்த உண்மை, எங்கே உள்ளது? சத்தியத்தில் தேடக்கூடிய அளவில் உண்மை என்று ஒன்று உள்ளதா? இருக்கிறதென்றால், இது நாள் வரை நமக்கு ஏன் அது புலப்படவில்லை? ஒருவேளை அந்த உண்மையைத் தேடுவதற்கு நாம் தேர்ந்தெடுத்த முறை தவறானதோ?

படித்த மேதையும் சரி, படிக்காத பாமரனும் சரி இந்த சமுதாயம் எப்படி சிந்திக்கிறதோ, அப்படித்தான் நாமும் சிந்திக்க வேண்டும் - அப்போதுதான் நாம் மதிப்புள்ள மனிதனாக வாழமுடியும் என்ற எண்ணத்துக்குத் தானே அடிமையாக இருக்கிறார்கள். தன்னைப் பற்றி இந்த சமுதாயமும், அதில் உள்ள நாலு பேரும் என்ன நினைக்கிறார்கள் என்பதில் தீவிர அக்கறை கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒரு புது கற்பனையை வரைந்து வைத்துக் கொள்ளும் இவர்கள், நாளடைவில் தங்களுடைய கற்பனைக்குத்தானே அடிமையாகி விடுகிறார்கள். 

இப்படிப்பட்ட கற்பனாவாதத்துக்கு அடிமைப் பட்டவர்களால் எப்படி எமது போராட்டம் சார்ந்த அடுத்த படிநிலை குறித்து சுதந்திரமாக ஆய்வுசெய்து, அறிவியல் ரீதியாக உண்மையான முடிவுகளை வழங்கமுடியும்? அப்படியானால் அந்த மாற்றம் எவ்வாறு நிகழும்? ... மாற்றம் என்பது அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவின் உண்மையில் இருந்து தொடங்கவேண்டும்! 


நன்றி.
அன்புடன்,
- த.ஞா.கதிர்ச்செல்வன்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!