இந்த அன்ரிக்கு மேற்குறித்த வரிகள் நன்றாகப் புரியும். ஏனென்றால், அது அவருடைய வார்த்தைகள் தான்.
கலைஞர்களை தலைவர் சந்தித்த நிகழ்வு ஒன்றில் இந்த வார்த்தையை அந்த அன்ரி பேசியிருந்தார். அடுத்தநாள், அந்த வார்த்தையை ஒரு தாளில் தனது கைப்பட எழுதி, தலைவர் தனது பாதுகாப்பு போராளியிடம் கொடுத்து அனுப்பி, தனது பாதுகாப்புப் போராளிகளுக்கு அதன் பொருள் தெரியுமா என்று அறிவதற்காக, அப்போது அந்த தலைவருடைய முகாமில் இருந்த பாதுகாப்புப் போராளிகள் ஒவ்வொருவரிடமும் கேட்டிருந்தார். (புதுக்குடியிருப்பில் பாலா அண்ணா இருந்த முகாம் என்று சொல்லப்படுகின்ற "வண்-வண்" முகாம் 1.1)
அப்போது பாதுகாப்பு பொறுப்பாக இருந்த அந்தப் போராளி, தலைவர் தனது கைப்பட எழுதிக் கொடுத்த அந்த தாளை ஒவ்வொரு போராளியிடமும் கொடுத்து கேட்டார். அவர் இப்போதும் இருக்கிறார். என்னிடமும் கொடுத்துக் கேட்டபோது உண்மையில் அப்போது எனக்கு அதற்கான பொருள் தெரிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வு நடந்த ஆண்டும் எனக்கு சரியாக நினைவில் இல்லை, சமாதான காலப்பகுதியின் ஆரம்பமாக இருக்க வேண்டும்.
இப்போது அந்த அன்ரி அந்த மாற்று இயக்க ஊடகத்துக்கு இப்படி ஒரு செவ்வியைக் கொடுத்ததைப் பார்த்தபோது (துணுக்காய் வதைமுகாமில் வைத்து தனது மகனை இயக்கம் சுட்டது என்று புளொட் உறுப்பினர் தனக்குக் கூறியவராம்) உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது.
ஆண்டு 2009 இற்குப் பிற்பாடு இவர் மாற்றுக் கருத்துடையவராக மாறியிருந்தார் என்று அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். ஆனால், அவர் இந்த செவ்வியில், உண்மைக்குப் புறம்பான விடயத்தை இப்படி இனஅழிப்பு அரசின் செம்மணி விடயத்தை மறைப்பதற்காக புலிகளுக்கு எதிரான கருத்துப் பரப்பலில் ஈடுபடும் அளவிற்கு மாறியுள்ளார் என்பது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்போது இவர்கள் புதிய உத்தி ஒன்றை கையாளுகிறார்கள். அதாவது, தேசியத் தலைவரை நேரடியாக எதிர்த்தால் எடுபடாது அல்லது அதற்கு எதிர்ப்புவரும் என்ற காரணத்தால், தலைவரை நேரடியாக குற்றம் சுமத்தாது, அந்த இயக்கத்தின் போராளிகளையும் அந்த இயக்கத்தையும் உண்மைக்குப் புறம்பாக, தவறாகச் சித்தரித்து மக்கள் மத்தியில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்துவது. பின்பு அதன்வழியாக, தேசியத் தலைவரையும் அவரது கோட்பாடுகளையும் தவறாகச் சித்தரித்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் என்கின்ற உணர்வை தமிழர்களிடம் இருந்து அழித்து, ஒற்றை இலங்கையர் என்ற கூட்டுக்குள் சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமைகளாக தமிழர்களை வாழவைப்பது என்பது.
இதற்குப் பெயர்தான், வரலாற்றை அழித்து, வரலாற்றை மாற்றியமைக்கும் உளவியல் போர். தமிழ் இனத்துக்கு எதிரான இந்த இன அழிப்புப் போரில், இவர் ஓர் அங்கமாக 2009 ஆம் ஆண்டிற்குப் பின்பு, ஏதோவொரு காரிய காரணத்துக்காக, மாறியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட தத்துவ அழிப்பிலும் அவர் ஈடுபட்டுவருகிறார். போர் முடிவடைந்த பின்னர் இனஅழிப்பு அரசுக்கு, அழிப்பதற்காக எஞ்சியிருக்கும் விடயங்களை - வரலாற்று அழிப்பு, தேசியத் தலைவரின் போராட்டத் தத்துவம், தேசியத் தலைவரின் கோட்பாடுகள் வழிநின்று போராட்டத்தின் தொடர்ச்சி இடம்பெறாது செய்தல் இவ்வாறானவற்றை - அழிப்பதில் இவரும் ஒரு கருவியாக ஈடுபட்டுவருகிறார்.
துணுக்காயில் நான் பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கும் துணுக்காயில் உள்ள காடுகள், பற்றைகள், சந்து பொந்துகள் எல்லாம் நன்கு தெரியும் என்ற வகையில் அந்த அன்ரியின் கூற்றை நான் முற்றாக மறுக்கிறேன். அதைவிட எனது தந்தையும் இந்திய இராணுவ காலப்பகுதியில் இருந்து ஒரு போராளியாகச் செயற்பட்டு பின்பு 2000 ஆம் ஆண்டு தமிழீழத் தேசத்தின் நலனுக்காக, தமிழீழத்துக்கு வெளியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.
அதனால் கூறுகிறேன், அவ்வாறு இவர்கள் செம்மணி விடயத்தை மறைப்பதற்காக பரப்புரை செய்வதுபோல் துணுக்காயில் எந்த ஒரு வதைமுகாமும் எனது அப்பாவுக்கோ அல்லது எனக்கோ அல்லது கடந்த ஐம்பது ஆண்டுகளாக துணுக்காயில் வாழ்ந்துவரும் மக்களுக்கோ அப்படி ஏதும் இருந்ததாகத் தெரியாது. துணுக்காயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகள் இயங்கினவே தவிர, அங்கு ஒரு விடுதலைப் புலிகளின் முகாம் என்று சொல்லும்படியாக எதுவும் இருக்கவில்லை என்பதை என்னால் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் கூறமுடியும்.
இவர்கள் வதைமுகாமாக ஒரு காணொளியில் காண்பிக்கப்பட்ட அந்த கட்டிடம் மற்றும் அந்த தொட்டி என்பன "சோழன் மில்" எனப்படும் ஒரு நெற்களஞ்சியமாக இருந்தது. முன்பு இந்திய இராணுவத்தின் காலத்தில் அந்தப் பகுதியில் பாரிய ஒரு 'ரவர்' இருந்தது. அதனை நாம் அப்போது "வயர்லஸ்" என்று அழைப்பதுண்டு. இந்திய இராணுவம் போன பிற்பாடு அந்த 'ரவர்' விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது. அந்தப் பகுதியில் இந்திய இராணுவத்தின் ஒரு படைத்தளம் இருந்தது என்பது அங்கு அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் அந்தக் காணொளியில் "வதைமுகாமாக" காண்பிக்கப்பட்டது, "சோழன் மில்" என்று அழைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு நெற்களஞ்சியத்தின் இடிபாடுகளை.
அந்த அன்ரி தன் வாயாலே ஒப்புக்கொள்கிறார், "தனது மகனுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக, 3 ஆண்டுகள் கழித்து விடுதலைப் புலிகளால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக". தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஓர் உரையில் கூறியது போல், "தமிழீழ விடுதலைப் புலிகள் துரோகிகளையும் சமூக விரோதிகளையும் போட்டுத் தள்ளியதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். அதனை தானே நூல்களில் எழுதியுமுள்ளார்," என்று.
குற்றவாளிகளைத் தண்டிப்பது வேறு, வதை முகாம் வேறு, இனஅழிப்பு வேறு. அந்த அன்ரியின் மகனுக்கு வேறு எங்காவது தண்டனை வழங்கப்பட்டு இருக்கலாம். ஆனால், துணுக்காய் என்ற அந்த மண்ணில் வதைமுகாம் என்ற ஒன்று இருக்கவில்லை என்பது அறுதியிட்டு உறுதியாக என்னாலும் அந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் மக்களாலும் திட்டவட்டமாக மறுக்க முடியும்.
இது, செம்மணி, கொக்குத்தொடுவாய் மற்றும் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இனஅழிப்பு அரசால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழிகளை மறைப்பதற்காக கட்டமைக்கப்படும் ஒரு கருத்துப்போர். இது தமிழர்களை வைத்து தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஓர் உளவியல் போர் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற அனைத்து தமிழர்களும் தேசியத் தலைவரின் விடயத்தில் அல்லது அவரது வரலாற்றைப் பதிவுசெய்யும் விடயத்தில் எங்களுக்குள் மோதிக்கொள்ளாது ஓரணியாகத் திரளவேண்டும். எமக்கு எதிராக வல்லாதிக்க சக்திகளால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் தேசியத் தலைவரின் கோட்பாடுகளையும் அழிக்கும் நோக்கில் பாரிய உளவியல் போர் என்றும் இல்லாதவாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எமக்குள் இவ்வாறு கருத்தியல் குளறுபடிகளை உணர்வுரீதியாகத் தூண்டிவிட்டு, எமக்குள்ளே மோதவைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியையும் தலைவருடைய தத்துவங்கள் கோட்பாடுகள் மற்றும் வரலாற்று அழிப்பு வேலைகளை எதிரி மிக நுட்பமாகச் செய்துவருகிறான்.
அதன் ஓர் அங்கம் தான் போராளிகளுக்கு எதிரான அல்லது போராளிகளை மக்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கான செயற்பாடுகளும் பரப்புரைகளும் ஆகும். ஆகவே, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை வைத்து கருத்துப் போர் செய்பவர்கள் அல்லது தலைவரின் வழி நின்று செயற்படுபவர்கள் மிகவும் நிதானமாகச் சிந்தித்துப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
அன்று, 22 ஆண்டுகளுக்கு முன்பு, "இனத்தை தறிக்க வந்த கோடரிக் காம்புகள்" என்ற அந்த அன்ரியின் வரிகளை ஒரு தாளில் எழுதி, அங்கிருந்த அவரது பாதுகாப்புப் போராளிகள் ஒவ்வொருத்தராக அதற்கு பொருள் புரிகிறதா என்று கேட்ட எங்களது தலைவர், இன்று இப்படி நடக்கும் என்று முன்னுணர்ந்ததாலோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
போராளிகள் விழிப்பாக இருக்கவேண்டும், "விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி" என்று ஒவ்வொரு போராளியையும் விழிப்பூட்டி வளர்த்த எங்களது தேசியத் தலைவரது தத்துவ வரிகளும் அவரது பிரபாகரினயக் கோட்பாடுகளும்தான், எதிரியால் முன்னெடுக்கப்படும் இந்த "வரலாற்று அழிப்பு மற்றும் உளவியற் போரை" முறியடிக்க இன்று ஆயுதமாகப் பயன்படுகின்றன.
"இப்போது ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்" என்று எமக்கு எதிராகப் பெரும் தவறான கருத்துப் பரப்பலை செய்தவர்கள் இப்போது இந்த காணொளியில் உரையாடுபவர்களைப் பார்த்து எதுவும் கேட்காமல் மௌனமாக இருப்பது ஏன்? அல்லது அவர்களும் அதில் ஓர் அங்கமா என்றுதான் மறுவாதத்தை வைக்கத் தோன்றுகிறது.
ஒருங்கிணைப்புக் குழுக்கள் என்ற பெயரில் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வுக்கு எதிராக தங்களது கையொப்பங்கள் மற்றும் தொடர்பு எண்கள் இல்லாது மொட்டையாக அறிக்கை விட்டவர்கள் இப்போது எங்கே? அல்லது, அவர்கள் இப்பேற்பட்ட வரலாற்று அழிப்பு மற்றும் உளவியல் போரை எதிர்கொள்ள ஒற்றுமையுடன் பயணிக்க முன்வருவார்களா? என்ற கேள்வியை எழுப்பி என்னுடைய இந்தப் பதிவை நிறைவுசெய்கிறேன்.
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
அன்புடன், பாநெஞ்சன்.
