.jpeg)
தமிழீழத் தேசியத்தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 02/08/2025 சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்து நாட்டின் Basel மாநகரில் அமைந்துள்ள Messe Basel பெருமண்டபத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வொழுங்குகளோடு, ஆயிரக்கணக்கான மக்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டு தமது இறுதி மரியாதை வணக்கத்தை உணர்வுபூர்வமாகச் செலுத்தினார்கள்.
முப்பத்து ஆறு ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் தேசவிடுதலைக்கான போரை நடாத்தி இறுதிவரை, கொண்ட இலட்சியம் மாறாது, தான் வரித்துக்கொண்ட இலட்சியத்தின் வழிநின்று, போராளிகளையும் தமிழ்மக்களையும் வழிநடாத்தி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் சிறிலங்காப் படைகளுடனான இறுதிச்சமரில் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
அவரது இறுதி வீரவணக்க நிகழ்வு, அவரால் வழிநடாத்தப்பட்ட போராளிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு, மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினரால் மிகவும் உணர்வுபூர்வமாகவும், பேரெழிச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டது. புலம்பெயர் தேசங்களைச் சேர்ந்த பல்வேறுபட்ட நாடுகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் துறைகள், படையணிகள், பிரிவுகள் சார்பான போராளிகளின் பங்குபற்றுதலுடன் அந்நிகழ்வில் பல ஆயிரக்கணக்கானோர் உணர்வெழுச்சியோடும் வரலாற்றுப் பொறுப்போடும் கூடியிருந்தார்கள். அவர்கள் தமிழீழத் தேசியத்தலைவருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபிற்கு அமைய உயரிய மரியாதைகள் வழங்கி, வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள்.
திரு. புரட்சி மற்றும் திரு. அல்பேட் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாகப் பொதுச்சுர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. இப்பொதுச்சுடர்களை ஈகைப்பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் புவனேஸ்வரி, திரு. சுப்பிரமணியம், திரு. சிறி இந்திரகுமார், போராளி ரஞ்சன் மாஸ்ரர், தி்ருமதி. இந்துமதி கிருபாசிங்கம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து, இவ்வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடியை போராளி ஜெயாத்தன் அவர்கள் ஏற்றி வைத்து, தமிழீழத் தேசியத்தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக்கொடி மீள அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
தொடர்ந்து, பொது மாவீரர்களுக்கான திருவுருவப்படத்திற்கு போராளி திருமதி. விமலினி சுடர் ஏற்றி வைக்க, மலர்மாலையை மூத்த பெண் போராளி திருமதி. தமிழவள் அணிவித்தார்.
முறையே, தமிழீழத் தேசியத்தலைவர் வீரச்சாவடைந்ததை நினைவுகூர்ந்து சோக இசை ஒலிக்கவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் உலகத் தமிழர் வரலாற்று வளாக இளையோர்களின் பண்ணிசை அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பாக அமைக்கப்பட்ட பேடை நோக்கி எடுத்துவரப்பட்டு நிலைப்படுத்தப்பட்டது.
அவ்வாறு நிலைப்படுத்தப்பட்ட தேசியத்தலைவரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரை, தேசியத் தலைவரின் பாடசாலை நண்பனும் லெப்.கேணல் குமரப்பாவின் சகோதரனுமான திரு. பாலசுந்தரம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலர்மாலையை
மாவீரர் லெப். கலையரசனின் பெற்றோர்களான திரு., திருமதி. கந்தையா வேலாயுதம்பிள்ளை தம்பதியினர் அணிவித்தனர். தமிழீழத் தேசியத்தலைவரின் நினைவாக வடிவமைக்கப்பட்ட நினைவு நடுகல்லிற்குத் தமிழீழத் தேசியக்கொடி மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நினைவு நடுகல்லுக்கான சுடரினை நிர்வாக சேவைப் பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவனின் மகன் தர்க்கிதன் ஏற்றிவைத்தார். மலர்மாலையை லெப். கேணல் விக்கீஸ் அவர்களின் புதல்வர்களான பவித்திரன் மற்றும் கோவரசன் ஆகியோர் அணிவித்தனர்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, முதன் முதலாகத் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலை அவரது உயரத்தில் நிறுவப்பட்டிருந்தது. அந்த திருவுருவச்சிலைக்கு தேசியத்தலைவரது காலத்தில் அவரது நண்பராக இருந்த திரு. குலம் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
வீரவணக்க நிகழ்வின் தொடர்ச்சியாக, தேசியத்தலைவரது நினைவு நடுகல் மீது உறுதியுரை வாசிக்கப்பட்ட சமவேளை, அகவணக்கமும் செலுத்தப்பட்டதுடன்,
துயிலுமில்லப் பாடல் ஒலிக்க, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் கண்ணீர்மல்க தமது ஆற்றுப்படுத்தமுடியாத பெருந்துயரை பகிர்ந்துகொண்டதுடன், தேசவிடுதலைப் போராட்டத்தை உறுதியோடு முன்னெடுப்போம் என உறுதி செய்துகொண்டனர்.
ஓர் நாட்டின் தலைவருக்கே உரித்தான முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் துறைகள், படையணிகள், பிரிவுகள் சார் போராளிகளால் மலர்வளையம் வைத்து அவருக்கு உயரிய மரியாதையும் செய்தனர்.
மேலும், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் தேசியத்தலைவரது நினைவுநடுகல், திருவுருவப்படம், அவரது குடும்பத் திருவுருவப்படங்கள் மற்றும் திருவுருவச்சிலை ஆகியவற்றுக்கு மலர் தூவி விளக்கேற்றி, தமது இறுதி வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினார்கள்.
அத்துடன், விடுதலைப்புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் திரு. சு.ரவி அவர்களால் வீரவணக்க உரையும் நிகழ்த்தப்பட்டது. மேலும், தேசியத் தலைவரது வீரவணக்க நிகழ்வை முன்னெடுத்த மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டு, தமிழீழத் தேசியக்கொடி கையேற்புடன், நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
தமிழீழத் தேசியத்தலைவரது வீரச்சாவோடு இறுதி யுத்தம் முடிவுற்று இற்றைக்கு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும், இன்றைய நாள் அவருக்கான வீரவணக்க நிகழ்வைச் செய்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க நடைமுறை மரபிற்கு ஏற்ப தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் மாவீரர் வரிசையில் இணைத்துக் கொண்டமையானது, தமிழர்களாக நாங்கள் அனைவரும் அவருக்குச் செய்த மிக உயர்வான மரியாதையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் விட்டுச்சென்ற இலட்சியக் கனவை எதிர்காலத்தில் எமது இளைய தலைமுறையினர் எம்மோடு இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்ற நிலையை வலுப்படுத்தி நிற்கின்றது.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."