மேஜர் கடலரசன்
மன்னார் களமுனையின் அடம்பன் பகுதி. ''KP 02'' எனக் குறிக்கப்பட்ட காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. 'ராங்கி' மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்னகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் மண்தடுப்பணையில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. அந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும்.
நிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது. சூட்டாதரவு, மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்குத் தேவையான கால அவகாசம்வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது.
''KP 02' இற்கு உடனே இரும்பை அனுப்புங்கோ," என்று கட்டளைப்பீடத்தில் இருந்த கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல் பரிமாறப்படுகிறது...
"நான் அங்கேதான் நிக்கிறன் K7, சரமாரியான சூட்டொலிகள்.. எறிகணை வெடிப்புகளுக்கிடையே அவனது குரல் தொலைத்தொடர்புக் கருவியூடாகத் தெளிவாகக் கேட்கிறது."
இவ்வளவு வேகமாய் எப்படிப் போனான்.. இப்படி கள நிலைமையை புரிந்துகொண்ட அவன் விரைந்து செயற்படுவது இது முதல்தடவை அல்ல என்பதை தளபதி அறிந்தே இருந்தார். அவர் மட்டுமல்ல; அங்கிருந்த அனைத்துப் போராளிகளும் அறிந்தே இருந்தனர்.
நாங்கள் அவனை இரும்பு என்றுதான் அழைப்போம். எனக்கு இவன் முதலில் அறிமுகமானது 2008இன் ஆரம்பப் பகுதியிலேயே. பூநகரிப் படையணி ஆரம்பிக்கப் பட்டபின் தனது கன்னிக் கள நடவடிக்கைகளுக்காக அடம்பன், பாலைக்குளி ஆகிய பகுதிகளில் நிலைகொள்ளத் தயாரானது.
இந்த அணியில் அவனும் உள்ளடங்கியிருந்தான். நல்ல உயரம்... உறுதியான உடலமைப்பு... குத்து வரியில் தனது கனரக ஆயுதத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான்.
சித்திரை மதம் 2008 அதிகாலை 'வேட்டையா முறிப்புப்' பகுதியில் எதிரியின் முன்னேற்ற நடவடிக்கை தொடங்கியது. எமது கட்டளைத் தளபதி லெப்.கேணல் ரகு (இப்போது மாவீரர்) அவர்களால் அழைக்கப்பட்டேன்.
"சுருதியின் காப்பரண் பகுதியில் தொடர்பில்லை.. இரும்பை உடனடியாக 'மோட்டார் சைக்கிளில்' கொண்டு அங்கு இறக்கிவிட்டு வா," என்று எனக்குக் கட்டளை வழங்கப்பட்டது.
அவன் தனது முழு ஆயத்தநிலையில் அங்கு நின்றிருந்தான். அவனையும் மற்றுமொரு போராளியையும் ஏற்றிக்கொண்டு சண்டை நடக்குமிடத்திற்கு விரைகிறேன். "வேகமாப்போ ...! வேகமாப் போ..!" என சத்தமிட்டபடி வருகிறான்.
சண்டை நடக்கும் பகுதியை அண்மித்ததும் நிறுத்தும்படி கூறியவன் '"இஞ்ச விட்டுட்டு நீ போ" என்கிறான். "நானும் உங்களோட வாறன் கடல்," என்று நானும் அவனுடன் புறப்பட, "அங்க 'ரோமியோ-2' இன் இடத்தில அவசரத்துக்கு ஆக்கள் இல்ல, நீ திரும்பிப் போ, கவனம்," என்று கூறிவிட்டு, எதிரியை மறித்துத் தாக்குவதற்காக விரைகிறான்.
நெடுநேரம் இடம்பெற்ற இச் சண்டை முடிவுக்கு வந்தபோது எமது காப்பரண் பகுதிகள் மீட்கப்பட்டதுடன், எதிரியின் படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன.
இச்சண்டையில் கடலரசனின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
இப்படித்தான் முன்னணிக் காப்பரண் வரிசையில் கடலும் அவனது PKLMG உம் எதிரியை மறித்துத் தாக்குதல் நடத்துவதிலும் விடுபட்ட நிலைகளை மீட்பதிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன.
கடலைப் பொறுத்தவரை PK இனை மட்டுமல்ல, RPG எனப்படும் உந்துகணைச் செலுத்தியையும் மிகத் துல்லியமாகக் கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்தான். பலமுறை அவனது RPG தாக்குதலும் எதிரியின் நகர்வுகளை முறியடிப்பதற்கு உதவியாய் அமைந்திருந்தத.
மல்லாவி களமுனைக்கு எமது அணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியை அண்டிய பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. மிகவும் கடுமையான சண்டை மூண்டது. "ஒரு ரீமோட கடலை உடனே அனுப்புங்கோ," என்று பிரிகேடியர் பானுவிடமிருந்து கட்டளை பறந்தது.
கடலரசன் அந்தச் சிறு அணியுடன் விரைகிறான். எதிரிகளை முறியடித்து அவனது அணி முன்னேறுகின்றது. எதிரியிடமிருந்து அங்கு கைப்பற்றிய RPG இனை அவன் எதிரிகளை நோக்கி இயக்குகிறான்...
இன்னுமொரு இலக்கு... விரைந்து முன்னேறி இலக்குப் பார்த்தவனின் தொடைப் பகுதியில் எதிரியின் குண்டொன்று ஆழத் துழைத்தது!
இச்சமரில் பல ஆயுதங்களும் எதிரியின் வாகனங்களும் கைப்பற்றப்படுகின்றன.
ஆனால் எங்கள் கடலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. களமெங்கும் கனன்று, விழுப்புண் பலதாங்கி, வீரம் விதைத்த இம் மாவீரன் மல்லாவி மண்ணில் விதையாகிப் போனான்.
"தம்பி டேய், நான் வீரச்சாவடஞ்சா என்னப்பத்தி நாலுவரி எழுதுவியா.."
அவனின் குரல் இன்றும் என்னுள் ஒலிக்கிறது...
***
குறிப்பு:- (Sulaxsan Mano) சுலக்சன் மனோ என்னும் முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது. மேஜர் கடலரசன் குறித்த மேலதிக தகவல் தெரிந்தோர், அவர் குறித்த தகவல்களைத் தந்துதவுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.