சுவிற்சர்லாந்தில் மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026 – தியாகத்தின் உறவுகளைப் போற்றிய உணர்வுபூர்வ நிகழ்வு!

TGK
0

 சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலம், Hochfelden பகுதியில் மாவீரர் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு 2026, நேற்று (22.11.2026) காலை 11 மணிக்கு உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் குடும்பத்தினரைக் கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நினைவஞ்சலி, கலை நிகழ்வுகள், பாடல்கள், கவிதைகள், சிறப்புரைகள் மற்றும் மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. தாயகத்திற்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் இடையிலான பாசப்பிணைப்பையும், தியாகத்தின் நினைவுகளையும் மீண்டும் மனங்களில் நிலைநிறுத்தும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது.


சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரின் ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில் ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வானது இன்று (22.11.2026) காலை 11.00 மணிக்குச் சிறப்புற ஆரம்பமாகியது.

மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மண்டப வாயிலிலிருந்து மண்டபத்திற்குள் சிறப்பாக அழைத்து வரப்பட்டு, தமிழர் மரபிற்கமையப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாகத் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, மாவீரர் திருவுருவப் படத்திற்கு மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் சிறப்புற ஆரம்பமாகின.

போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுங்கு படுத்தப்பட்ட இந்நிகழ்வானது, தியாகத்தின் அடையாளமாகத் திகழும் மாவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உரித்துடையோரை மதிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவீரர்கள் தொடர்பான நடனங்கள் இடம்பெற்றதுடன், போராளிகள், மூத்த தாயகப் பாடகர்கள் மற்றும் தாயகக் கவிஞர்கள் என அனைவரும் தாம் விதைத்துவிட்டு வந்த உரிமையுள்ள நண்பர்கள், தோழியர், சகோதர, சகோதரிகளுக்கான பாடல்கள், கவிதைகள் மற்றும் சிறப்புரைகளைச் சிறப்பாக வழங்கியிருந்தனர். அத்துடன் தங்களின் மாவீரர்களுடனான அனுபவப் பகிர்வுகளையும் மக்களுக்காக விதைத்திருந்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, தாயக இசையமைப்பாளர் முகிலரசன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இளந் தலைமுறையினர் பாடல்களுக்கான இசையினை வழங்கியமை சிறப்பாக அமைந்திருந்தது. எமது அடுத்த தலைமுறை எமது மாவீரர்களைத் தொழுவதற்காகவும், அவர்கள் பாதையைத் தொடர்வதற்கான விதை விதைக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் பெருமையே.

நிகழ்வில் சிறப்புப் பேச்சினைத் துளசிச்செல்வன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார். இவை அனைத்தையும் கடந்து, மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டது. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகத் தாயகத்தில் இடம்பெற்ற மக்களுக்கும் புலிகளுக்குமான பாசப்பிணைப்பினை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வினை, மீண்டும் ஒரு முறை நீண்ட கால இடைவெளியின் பின்னர் எண்ணக்கண்முன்னே கொண்டுவந்து சேர்த்திருந்தது இந்த நிகழ்வு.

நிகழ்வுஆ மண்டபத்தில் எதுவித ஒழிவு மறைவுகளும் இன்றி கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வரவுசெலவு கணக்கு விபரங்கள் வெண்திரையில் வெளிப்படையாக மக்களின் பார்வைக்கு திரையிடப்பட்டிருந்தமை தமிழீழத் தேதியத் தலைவரின் நற்பண்பின் வழியாக போராளிகளுக்கு புகட்டப்பட்டிந்தமை மக்களுக்கு வியப்பாகவே அமைந்திருந்தது.

“ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்” எனும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக, மாவீரர்களைப் போற்றும் பண்பினைப் போராளிகள் பின்பற்றுவது மக்களால் இன்றும் மெச்சப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு, ‘நம்புங்கள் தமிழீழம்’ பாடல் நிறைவுடன் நிகழ்வு இனிதே சிறப்பாக நிறைவுற்றது.





























































Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!