இயங்குதலுக்கான பின்தளமும் மீளொழுங்கு படுத்தலும்!
இரண்டாவது வகையான, அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கு இயல்பாகவே தாயகம், தமிழ்நாடு, புலம்பெயர் நாடுகள் என இப்போது இயங்குவதற்குப் பாரிய தளங்கள் உள்ளன. இந்த வழியில் போராடுவதற்கான தளத்தைத் தான் காலமும் சூழலும் பூகோள அரசியற் காரணிகளும் உருவாக்கியுள்ளன.
ஆனால், இவற்றை ஒருங்கிணைக்கும் சக்தி யாரிடம் உள்ளது என்பதுதான் பிரச்சினை? தாயகம், தமிழ்நாடு, புலம்பெயர் நாடுகள் என ஒருமித்த அரசியல் செயற்பாட்டுத் தளத்தை உருவாக்கி, மிக நுட்பமாகவும் அறிவுபூர்வமாகவும் செயற்பட்டால் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டமுடியும். அதற்கான வழிவகைகள் நிறையவே உள்ளன.
ஆனால், இவற்றை ஒருங்கிணைக்கக் கூடிய வல்லவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தாலும், அவ்வாறு ஒருங்கிணையச் சில முதன்மையான தரப்புக்கள் தாயாராக இல்லை. காரணம்:- பதவி, பணம், பொறாமை. இந்த மூன்று பண்புகளும் யாரிடம் அதிகம் காணப்படுகிறதோ, அவர்கள் துரோகம் இழைக்கக்கூடிய எல்லைக்குச் சென்றுவிடுகிறார்கள்.
ஒரு நாட்டில் ஆழுங்கட்சி, எதிர்க்கட்சி, இடதுசாரிகள், வலதுசாரிகள், மத அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள் எனப் பல்வேறு செயற்பாட்டு வடிவங்கள் இருப்பதைப் போன்று, பல பிரிவுகளாக, பல அரசியல் செயற்பாட்டுத் தளங்களாக, பல கட்சிகளாகப் பிரிந்து நின்று செயற்படுவதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால், தேவைப்படுகின்ற போது, அவை ஒரே புள்ளியில் ஒன்றிணைய வேண்டும். நோக்கத்தை அடைகின்ற தக்க தருணங்களில் ஒன்றிணைய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல அரசியல், இராசதந்திரப் புரிதல் அவசியம். இப்போது இவை கிஞ்சித்தேனும் இல்லாவர்கள் தான் முதன்மையான குழுக்களை தலைமை தாங்கி இருக்கிறார்கள் போல் தெரிகிறது.
வழிநடத்துவதற்கான தலைமை இல்லாத விடத்து, ஒரு பொதுவான சிந்தனைத் தளத்தை அல்லது ஒரு அறிவுக் குளாத்தை உருவாக்கி, நல்ல திட்டங்களைப் படைத்து, கடந்த 8 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்திருக்க முடியும். ஆனால் அதைச் செய்யாத குற்றத்திற்கு ஆளாகியவர்களாகவே வரலாறு பார்க்கின்றது.
திரு.சீமான், திரு. உருத்திரகுமார் ஆகியோருடன் இணைந்து, பரஸ்பர உறவை வளர்த்து, உதவி, ஒத்தாசை களை நல்கி மிகவும் சக்திவாய்ந்த மாற்றங்களைச் செய்திருக்கலாம். இனியும் கூடச் செய்யலாம். ஆனால், அந்த மாற்றம் எப்போது என்றுதான் புரியவில்லை.
திரு.சீமான் அவர்களுடைய போராட்ட வடிவம் என்பது மிகவும் தனித்துவமானது. தமிழ் நாட்டில் அவருடைய போராட்டம் என்பது வரலாற்றின் கட்டாயத்தில் பிரசவித்ததாகும். அவர் தனது செயற்பாட்டுத் தளத்தில் ஒவ்வொரு நகர்வையும் மிக நேர்த்தியாகவும் அறிவுபூர்வமாகவும் முன்னெடுத்து வருகிறார். அதில் அவர் பெரிதும் சாதித்துவருகிறார். திரு.சீமானை தமிழர்கள் பலப்படுத்த வேண்டியது மிகவும் தலையாய கடமையாகும்.
குறித்த தரப்புக்களிடம் காணப்படாத அந்த ஒற்றுமைக் குறைவுதான் இன்றைய அரசியல் பின்னடைவுகளுக்கு முதல் காரணியாக உள்ளது.
இந்த ஒற்றுமைக் குறைவை ஏற்காத மக்கள், வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து நிற்கவேண்டி ஏற்படுகிறது. இதை விரும்பாத பெரும்பாலான மக்கள் எந்தப் போராட்டத்திலும் பங்குகொள்ளாது ஒதுங்கி நிற்கிறார்கள். இந்தத் துர்ப்பாக்கிய நிலையை எதிரி சாதகமாகப் பயன்படுத்துகின்றான். இந்தப் போக்கு உண்மையில் மிகப்பெரிய வரலாற்றுப் பின்னடைவை ஏற்படுத்தும்.
இதை நன்றாக உணர்ந்துகொண்டு, உரிய முறையில் வேண்டிய அரசியற் செயற்பாடுகளுக்கு பணம் மற்றும் வேண்டிய உதவிகளை முதன்மைக் குழுக்கள் வழங்கி ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். அவசியமான சிறந்த திட்டங்களை உருவாக்கி, செயற்பாட்டில் இறங்க வேண்டும்.
அவ்வாறு செயற்படுகின்ற போதுதான் மாற்றம் என்பது சாத்தியமாகும். நாளைய மாற்றத்துக்கான விதையை இன்றே வீசவேண்டும்.
தாயகத்தைப் பொறுத்தவரை, அங்கே தமிழீழத்துக்கான அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சூழல் தற்போது இல்லை. ஆனால், சுமத்திரன் போன்றோரின் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு என்ற ஏமாற்று வித்தையை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
அங்கே, தமிழர் பிரதிநிதியாகச் செயற்படுபவர்களை எதிரியானவன் பல கோடி பணம் கொடுத்து, அவர்களைத் தனது நலனுக்கு ஏற்ப செயற்படுத்துகிறான். ஆனால், திரு.சீமான் போன்று தமிழீழத்திலும் நாளாந்தம் ஒன்றுகூடல்களைச் செய்து, மக்களுக்கு சமகால அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்தி, தொடர்ந்து உண்மைகளை எடுத்துரைத்து வரவேண்டும். இவ்வாறு செய்துவருவதன் மூலம் மக்கள் தக்க சமயத்தில் தேசியத்தின் பால் ஒன்றுபட்டு நிற்பார்கள்.
புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை, குறைந்த பட்சம் மக்கள் வாக்கெடுப்புச் செய்து, இராசதந்திர வழியில் செயற்படுவதற்கான ஒரு பேரம் பேசும் சக்தியை நிறுவ முடியும். அந்தப் பேரம் பேசும் சக்தி மூலம் சிறந்த இராசதந்திர நடவடிக்கைகளை அனைத்துலக ரீதியாக முன்னெடுக்க முடியும்.
இதற்கு, நாடுகடந்த அரசாங்கம் நல்ல ஒரு பொறிமுறையாக எனக்குப் படுகிறது. அதில் உள்ள ஆட்கள் சரியில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் பலரால் கூறப்படுகிறது. அதற்கு ஈடாக அங்கே, நல்ல ஆட்களை ஈடுபடுத்தி அந்தப் பொறிமுறையை இயக்க முடியும்.
ஒன்றும் செய்யாமல் அவர் பிழை, இவர் பிழை என்று வெட்டிப் பேச்சுப் பேசுவதைக் காட்டிலும், ஏதாவது முயன்று செயலைச் செய்வது மேல். மாற்றம் என்பது தானாக உருவாகாது, அதனை உருவாக்க வேண்டும்!
நன்றி.
த.ஞா.கதிர்ச்செல்வன்.