முள்ளிவாய்க்கால் இனவழிப்பு தமிழினத்திற்கு உணர்த்தியுள்ள பாடம்!
முள்ளிவாய்க்காலில் வைத்து சமராய்வு மையப் பொறுப்பாளர் திரு.யோ.செ.யோகி அண்ணா அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட ஒரு விடயத்தை இந்தவேளை அனைவருக்கும் அறியத்தர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் "நாம் தமிழர்" ஆட்சி அமைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவே இங்கே இதனைப் பதிவுசெய்கிறேன்.
ஏப்ரல் 27, 2009 அன்று கலைஞர் கருணாநிதி "போரை நிறுத்துவதற்காக" உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்த நேரடிக் காட்சியை மக்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான வேளை, திரு.யோகி அண்ணாவுடன் இருந்து பார்த்தோம். இந்த செய்தியைப் பார்த்துவிட்டு யோகி அண்ணா கூறினார், "கலைஞர் கருணாநிதி மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி. அவர் நினைத்தால் இந்தப் போரை நிறுத்த முடியும்," என்றார்.
அப்போது நான் கூறினேன், "அண்ணை, அப்படியென்றால், போரை நிறுத்துவதற்காக அவர் உண்ணாவிரதமே இருக்கிறார் என்றால் அப்ப எப்படியும் போர் நிறுத்தத்தை ஏற்படித்திடுவார் போல," என்றேன். அதற்கு யோகி அண்ணா கூறினார், "கருணாநிதியால முடியும்... இரண்டொரு நாள் பொறுத்திருந்து பார்ப்போம்..." என்றார். இரண்டொரு நாள் அல்ல வெறும் 5 மணித்தியாலத்துக்கு உள்ளேயே உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டதாக அதே தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தோம்.
உண்மையில், கருணாநிதி இதயசுத்தியோடு நினைத்திருந்தால், மனசுவைத்திருந்தால், போர் நிறுத்தப்பட்டிருக்கும். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிறுத்தப்பட்டிருக்கும். பல ஆயிரக்கணக்கான எமது மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதை செய்திருந்தால், எமது தேசியத் தலைமையின் நேரடி வழிகாட்டல் எமது மக்களுக்கு இன்றும் இருந்து, எமது மக்களும் எமது மண்ணும் எமது வழங்களும் பாதுகாக்கக்கூடிய வகையில் எதிர்காலம் கட்டமைக்கப் பட்டிருக்கும். அந்தப் போர் நிறுத்தப்பட்டு சிறிது கால இடைவெளி ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், நாம் நிச்சியமாக அந்த சூழலை மாற்றியமைத்திருப்போம். ஆனால், கருணாநிதியால் அந்தப் போரை நிறுத்த முடிந்தும், அந்த தார்ப்பரியத்தை நன்கு தெரிந்தும், அவர் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை. ஏன்? என்ன காரணம்? தமிழன் என்ற உணர்வு இல்லை. தமிழினத்தைப் பாதுகாக்கவேண்டும் என்ற இதயசுத்தி இல்லை. இந்த அடிப்படை தான், "நாம் தமிழர்" என்ற ஓர்மத்தோடு உலகத் தமிழினத்தை ஒன்றுபட்டுப் போராடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
2009 மே 18 வரை, தமிழினம் எதனையெல்லாம் இழக்கக்கூடாதோ, அவற்றையெல்லாம் இழந்துவிட்டது. "முள்ளிவாய்க்கால் நினைவுநாட்கள்" நாம் இழந்தவற்றையிட்டு அழுவதற்கானதோ, ஆற்றுப்படுத்துவதற்கானதோ அல்லது மறப்போம்-மன்னிப்போம் என்று அடங்கிக் கிடப்பதற்கானதோ அல்ல! மாறாக,
அதிலிருந்து படிப்பினையைக் கற்று, உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு, உலகில் தமிழர்கள் எந்தெந்த வழிகளிலெல்லாம் போராடமுடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் பரஸ்பர ஆதரவோடு ஒன்றுபட்டுப் போராடவேண்டும். உலகில் தமிழினத்துக்காகக் குரல்கொடுக்க, இதயசுத்தியோடு செயற்பட, அழிவிலிருந்து எமது இனத்தைப் பாதுகாக்க, தமிழ் இனத்துக்கான எதிர்காலத்துக்காகப் பாடுபட தமிழனின் கையில் ஆட்சி அதிகாரம் தேவை. முதலில் தமிழ் நாட்டில் தமிழர்களுடைய கையில் ஆட்சி அமைந்து அங்கே மாபெரும் மாற்றமும் எழுச்சியும் அவசிம் ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
"நாம் தமிழர் கட்சி" தமிழினத்துக்கான புதிய வழியைத் திறக்கக்கூடிய ஒரு அமைப்பு. அந்த அமைப்பை தமிழர்கள் ஒன்றுபட்டுப் பரஸ்பர ஆதரவை வழங்கவேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடப்பாடு. இதை நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. "தமிழ்நாட்டின் மாபெரும் மக்கள் சனத்தொகையுடன்கூடிய இளைஞர் எழுச்சி, இந்திய மத்திய அரசுக்கும் உலகநாடுகளுக்கும் அழுத்தங் கொடுக்கக்கூடியதும் இராசதந்திர ஈடுபாட்டை அணுகுவதற்கும் ஏற்ப பொருளாதார மற்றும் எழுச்சிகொண்ட பெரும் மக்கள் பலத்துடன் படிப்படியாக நிறையவே சாதிக்க முடியும்."
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு தமிழினத்திற்கு உணர்த்தியுள்ள மிகப்பெரும் பாடம், தமிழினத்தைப் பாதுகாக்க தமிழனின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும் என்பதே. இறுதி நாட்களில் தேசியத் தலைவரால், முப்படைகளுக்கும் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர். சூசை அண்ணா, திரு.சீமான் அவர்களிடம், "தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுங்கோ. உங்களை நம்பித்தான் விட்டுட்டுப் போறம் (வீரமரணம்)" என தெளிவான செய்தியை அனுப்பியிருந்தது அனைவரையும் சென்றடைந்திருக்கும்.
ஆகவே, எமது அன்பான மக்கள் இதனைப் புரிந்துகொண்டு திரு.சீமானின் கரங்களைப் பலப்படுத்தி, அவரது வெற்றிக்கு உறுதுணை நின்று, மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு சந்தர்ப்பத்தை - பொறுப்பை - ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொறுப்போடு அறியத்தருகிறோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."
நன்றி.
அன்புடன்,
த.ஞா.கதிர்ச்செல்வன்.
அன்புடன்,
த.ஞா.கதிர்ச்செல்வன்.