மாவீரம் போற்றும் மாதலைவன் பிரபாகரன்!
இன்று (26/11), தமிழ் இனத்தின் மிகப்பெரும் தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள்!
மரணம் ஒன்றுக்கு அஞ்சி நடுங்கும் உலகவாழ் மானிட உயிரினங்களுக்கு நடுவே, அந்த மரணத்தையே விடுதலை வெற்றிக்கு அடிப்படையாக்கியவர். மரணத்தையே ஆயுதமாக்கி எதிரிகளை நடுங்கவைத்து தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெரும் வெற்றிகளை ஈட்டியவர்.
"சாகத் துணிந்தவனே பெரும் சாதனைகளைப் படைப்பான்" என்ற தத்துவத்தை இந்த உலகிற்குப் புகட்டியவர். மரணத்துக்கு இலக்கணம் வகுத்து போரில் மடிந்த மறவர்களுக்கு "மாவீரர்" என்னும் ஆத்மார்த்த வடிவம் கொடுத்தவர்.
இயற்கையின் நியதியான மரணத்தில் "மாவீரம் தழுவிய மரணத்தை" பெரிதும் மதித்தவர். தலைவனின் வழியில் விதையான மாவீரர்கள்; மாவீரரின் வழியில் சென்று தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை எமக்கு வழிகாட்டும் தலைவன்!
இன்று இனத்தின் தலைவனாக, இறைவனாக, தேசிய விடுதலையின் ஆன்ம வழிகாட்டியாக, மாபெரும் மாவீரனாக நீக்கமற உலகத் தமிழினத்தின் நெஞ்சங்களில் எக்காலமுமாய் நிறைந்திருக்கின்றார்!
பேசாமல் பேசவைக்கும் எங்கள் தலைவன் இன்றைய விடுதலைப் போராட்டத்துக்கான ஒரு பாதையையும் உருவாக்கித் தந்துள்ளதை நாம் உணரவேண்டும்.
அந்நிய வல்லாதிக்க நாடுகளின் கூட்டுச் சதியில் எமது தேசிய விடுதலைப் போராட்டமும் எமது இன மக்களும் அழிக்கப்பட்ட போது, அந்த அழிவையே ஆயுதமாக்கி உலகின் மனச்சாட்சியைத் தட்டிவிட்டு, சர்வதேச சமூகத்திலும் ஐ.நா.மன்றத்திலும் தவிர்க்கமுடியாத சக்தியாகத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நிலைபெறச் செய்துள்ளார்.
இனி அந்தப் போராட்டத்தின் வெற்றி என்பது தமிழரின் ஒற்றுமைப் பலத்தால் சரியான தொலைநோக்கிய திட்டமிடல் மற்றும் செயற்பாட்டில் தான் தங்கியுள்ளது.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் விலைபோகாது - விட்டுக்கொடுப்புக்கள் செய்யாது தமிழீழக் கோரிக்கையில் ஒன்றுபட்டு ஒரே நிலைப்பாட்டில் தமிழினம் பயணிக்கும்போது, பூகோள அரசியல் நிலைமைகள் மாறும்போது நிச்சயம் தமிழீழம் விடுதலைபெறும்.
இதை எமது தலைவர் அன்றே தீர்க்கதரிசனமாக உணர்ந்து, "சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக" எனத் தனது இறுதி மாவீரர்நாள் உரையில் (2008) இறுதிவரியில் கூறிமுடித்துள்ளார்.
அந்த வகையில், "மாவீரர்கள் கண்ட பெருந்தலைவன்! மாவீரம் போற்றும் மாவீரன்! முப்படைகள் கண்ட முதல் தமிழினத் தலைவன்!" அவர்கள் பிறந்து இன்றுடன் 63ஆவது ஆண்டு (2017). அந்த தலைவனின் அகவை நாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
நன்றி.
- த.ஞா.கதிர்ச்செல்வன்