(மே-2015, அகரம் சஞ்சிகையில் வெளியானது)
அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் ஆதரவோடு ஆரம்பிக்கப்பட்டு, சீனாவின் கூட்டணி நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றி வைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் கொலைக் களம்.
முள்ளிவாய்க்கால். உலகப் பெரும் வல்லரசுகளுக்கு இடையேயான பூகோள ஆதிக்கப் போட்டியில் பிழிந்தெடுக்கப்பட்ட 21ஆம் நூற்றாண்டின் முதலாவது மனிதப் பேரவலம். பிருத்தானியக் காலனித்துவம் சிங்கள சிறிலங்காவிடம் கைமாறிய நாளிலிருந்து இலங்கைத் தீவில் தமிழர்களின் இறைமையும் இருப்பும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவந்த தொடர்ச்சி 2009இல் உச்சம் பெற்றதால், அது ஓர் இனப்படுகொலையாக சர்வதேசத்துக்கு அடையாளப்படுத்தியது. இந்நூற்றாண்டில் நடைபெறப்போகும் யுரேசியாவைக் கட்டுப்படுத்துவதற்கான வல்லரசுகளின் பூகோள அரசியற் போரால் தமிழீழத்துக்கு ஏற்படவிருந்த ஆபத்தை முன்னுணர்ந்த தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் டிசெம்பர் 2000 ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தார். பின் 2002 இல் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இடைக்கால அரசு என்ற புதிய முன்னெடுப்பு ஊடாக நகர்த்துவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சி, ஓர் இலங்கைத் தீவுக்குள் இரு துருவ அரசுகள் இருப்பதை விரும்பாத வல்லரசுகளின் நலன்களால் திட்டமிட்டு நசுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமும் தமிழர்களின் ஏகப் பேராளர்களும் மௌனிக்கப்பட்டுள்ள இன்றைய சூழல், சோரம்போகும் தமிழ்த் தலைவர்களின் பிடிக்குள் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் பின்வாங்கப்படுகின்ற போக்கு வெளிப்பட்டு வருகிறது.
இந்துமா சமுத்திரத்தில் கடலாதிக்கம் செலுத்தவும் சீனாவின் எழுச்சியைக் கட்டுக்குள் அடக்கவும் கேந்திர முக்கியம்வாய்ந்த மூலோபாயத் தளமாக இலங்கைத் தீவு விளங்குகிறது. சிறிலங்காவில் மேற்குலகிற்கு ஆதரவான ஓர் ஒற்றை ஆட்சிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கி, முழு இலங்கைத் தீவையும் சீனாவுக்கு எதிரான தனது பூகோள அரசியல் நகர்வுகளுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்ற அமெரிக்காவின் கனவு, கடந்த நவம்பர் 2005 இலங்கை சனாதிபதித் தேர்தலில், விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் பின்தள்ளப்பட்டிருந்தது. மேற்குலகிற்கு ஆதரவான ஆட்சியாளர் தோற்கடிக்கப்பட்டதால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களில், சனவரி 2006 இல் அமெரிக்கத் தூதுவர் ஜெப்பிரி லூன்ஸ்ரெட் (Jeffrey Lunstead) தமிழீழ விடுதலைப் புலிகளை இவ்வாறு எச்சரித்தார்: 'கொழும்புவின் வரைமுறைக்கமைய முன்வைக்கப்படும் ஒரு தீர்வுக்கு விடுதலைப் புலிகள் மிக விரைவாக உடன்படவேண்டும், இல்லையேல் மிகப் பலம்வாய்ந்த, மிக அதிக வலுமிக்கதும் மிக அதிக நிச்சயிக்கப்பட்டதுமான சிறிலங்காப் படையுடன் முகங்கொடுக்க நேரிடும். எங்களது படைப் பயிற்சி மற்றும் உதவித் திட்டங்கள் வாயிலாக, பயங்கரவாத முறியடிப்புக்கு உதவுவதோடு சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் முடக்கப்படும். சிறிலங்கா அரசாங்கம் அதன் மக்களையும் நலன்களையும் பாதுகாப்பதற்கான ஆற்றலை வடிவமைப்பதற்காக நாங்கள் உதவிக்கொண்டிருக்கிறோம்,' என அச்சுறித்தினார்.
இருபத்தைந்து ஆண்டுகளாக நீடித்த தமிழர்களின் ஆயுத வடிவிலான உரிமைப் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுவதற்கான அதன் ஆதரவை, சில மணித்தியாலத்துக்குள் முடிவெடுத்து, கைவிடுவதாக உத்தியோகபூர்வமாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 2002 போர்நிறுத்தம் செய்துகொள்ளப்பட்டபோது தடையை நீக்கிய சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மீண்டும் தடைவிதித்தது. சிறிலங்கா அரசு 2006இல் மீண்டும் போரை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா ஊக்குவித்ததோடு, சிங்களப் படைகளின் ஒவ்வொரு படி முன்னேற்றத்துக்கும் அமெரிக்காவிடமும் அதன் முக்கிய கூட்டணி நாடுகளிடமும் இருந்து ஆதரவு வழங்கப்பட்டது. சிறிலங்காப் படையினருக்குத் தீவிரவாத முறியடிப்புப் பயிற்சி வழங்குதல், அதேவேளை புலனாய்வு மற்றும் படைக்கலன்களை வழங்குவதற்கு பென்டகன் அனுமதியளித்தது. விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் விநியோகத்தை முற்றாகத் துண்டிப்பதற்கு, சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகளின் கப்பல் நடமாட்டங்கள் குறித்த தகவல்களை சிறிலங்காப் படையினருக்கு வழங்கின. அதேவேளை, அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடான இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், விரிவானதும் மேம்பட்ட தொழினுட்பம் கொண்டதுமான ஒரு படைக்கலச் சாலையை சிறிலங்காப் படையினருக்காக வழங்கின.
கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிடம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலில் இணைக்குமாறு அமெரிக்காவால் வழங்கப்பட்ட அழுத்தமானது ஒரு பாரிய சிக்கலுக்குரிய விடயமாகும். இந்த தடைகள் காரணமாக புலம்பெயர் மக்களின் தேசியத்துக்கான நிதிகள் முடக்கப்பட்டு, புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழீழத்துக்குமான பரஸ்பர ஆதரவு துண்டிக்கப்பட்டது. புலம்பெயர் நாடுகள், தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகளிடமிருந்து கிடைக்கக்கூடிய தமிழ்மக்களின் போராட்டத்துக்கான அரசியல் ஆதரவு வலிந்து தடுக்கப்பட்டது. தமிழீழத்தைச் சுற்றிவர விடுதலைப் புலிகளின் அனைத்துக் கடல் விநியோகம் மற்றும் போக்குவரத்துக்கள் யாவும் சர்வதேச நாடுகளால் திட்டமிட்டுத் துண்டிக்கப்பட்டன. யு.என்.எச்.சி.ஆர். உள்ளிட்ட சர்வதேச மற்றும் அரசசார்பற்ற மனிதநேய உதவி அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற சிறிலங்கா அரசின் கட்டளையை அமெரிக்க கூட்டணி நாடுகள் ஏற்றுக்கொண்டு, அவற்றின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தின. காஸாவுக்கு எதிரான இஸ்ரேல் அரசாங்கத்தின் தாக்குதல்களை வோசிங்டன் மற்றும் மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனவோ, அதேபோன்று தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாறும் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டு, பயங்கரவாதிகள் எனவும் பிரிவினைவாதிகள் எனவும் திரிபுபடுத்தப்பட்டனர். நீதிவேண்டிப் போராடுகின்ற மக்கள் தொடர்ந்தும் அரச பயங்கரவாதத்தால் அடக்கப்படும்போது, இந்த ஊடகங்களின் இருட்டடிப்பானது, வரலாற்றின் கசப்பான அநீதியாகும்.
விடுதலைப் புலிகளை போரில் வெற்றிகொள்வதற்காக அமெரிக்காவால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட இந்த உதவிகளுக்குக் கைமாற்று உதவியாக அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், தாக்குதல் விமானங்கள் என்பன சிறிலங்காவில் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக 'உள்நுழைதல் மற்றும் ஊடறுத்துச் செல்லுதல் நடைமுறை ஒப்பந்தம்' (Access and Cross-Services Agreement) ஒன்று மார்ச் - 05, 2007 இல் கைச்சாத்திடப்பட்டது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடனான கடந்தகாலப் பகைமை காரணமாக இந்தியா படைத்துறை, புலனாய்வு மற்றும் அரசியல் ஆதரவை சிறிலங்காவுக்கு வழங்கியதோடு, அதன் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளையும் நேரடியாக சிறிலங்காவோடு தலையிட்டு உதவுவதற்குத் தனது முழுமையான ஒத்தாசையை வழங்கியது. அதன்வாயிலாக, சீனா தனது ஆதிக்கத்தை சிறிலங்காவில் நிலைநிறுத்துவதற்கு வழிவகுத்தது. சிங்கள மேலாதிக்க வர்க்கத்தின் அதிகாரத்தையும் முன்னுரிமைகளையும் வலுப்படுத்தும் நோக்கிலே போருக்கான ஆதரவு இந்த வல் அரசாங்கங்களால் வழங்கப்பட்டு வந்தது.
போருக்கு எதிரான உலகளாவிய தமிழர்களின் எழுச்சியைக் கருத்தில்கொண்டு, அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் ஆதரவோடு மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வென்றுவிட முடியாது என்ற உண்மையை உணர்ந்த சிறிலங்கா அரச இயந்திரம், சீனாவின் கூட்டு நாடுகளின் ஆதரவையும் நாடியது. சிங்கள சிறிலங்காவின் வரலாற்றில் 2007 ஒரு மைல்கல் ஆண்டாகப் பார்க்கப்படுகிறது. மார்ச்-12, 2007 அம்பாந்தோட்டையில் ஒரு மிகப்பெரிய கடற் துறைமுகத்தைக் கட்டுவதற்கு சீனாவுக்கு கொழும்பு அனுமதி வழங்கியதோடு, அந்தத் துறைமுகக் கட்டுமானத்துக்கான உடன்பாட்டில் சிறிலங்காத்; துறைமுக அதிகார சபையுடன் இரண்டு சீன நிறுவனங்கள் கைச்சாத்திட்டன. சிறிலங்கா அரசின் இந்த முடிவானது, போரை வெற்றிகொண்டு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீனாவின் ஆதரவையும் பொருளாதார நலன்களையும் அடிப்படையாகக் கொண்டு தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டதாகும்.
சீனாவின் இந்த துறைமுகத் திட்ட முன்னெடுப்பானது, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பிடிக்குள்ளிருந்து சிறிலங்காவை விடுவிப்பதோடு, சிறிலங்காவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி, இந்து சமுத்திரத்தில் தனது கடலாதிக்கத்தைப் பலப்படுத்தி, அதன் கடல்வளி விநியோகத்தை இலகுபடுத்துவதற்கானதாகும். அதுவானது, சீனாவின் எழுச்சியைக் கட்டுக்குள் அடக்கி, சீனாவுக்கு வெளியே எந்தத் துறைமுகங்களையோ, தளங்களையோ சீனா அமைக்காதவாறு தடுப்பதற்கான அமெரிக்காவின் கொள்கைக்கு முரணானதாக அமைந்துள்ளது. அதன்விளைவாக, சிறிலங்காப் படைத்துறைக்கான அதன் படைத்துறை உதவியை அமெரிக்கா நிறுத்தியது. இதன் பின்னணியில்தான் இந்தியா, தமிழர்களுக்கு இலங்கையில் சுயாட்சியுடன் கூடிய சமஸ்டித் தீர்வு குறித்து கொழும்புக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. இந்நிலையில் பீஜிங், கொழும்புக்கான அதன் அரசியல் பலத்தையும் பெருவாரியான ஆயுதக் கப்பல்களையும் சிறிலங்காவுக்கு வாரியிறைத்தது. அமெரிக்காவுடன் சீனாவின் உதவியை ஒப்பிடுகையில், 2008 இல் சிறிலங்காவுக்கான சீனாவின் உதவி ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கையில், அமெரிக்காவின் உதவி 7.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
சிறிலங்காவுடனான சீனாவின் படைத்துறை உறவுகள் 1990 களில் ஆரம்பித்திருந்தாலும், 2007 இந்த இரு நாடுகளுக்குமிடையேயான படைத்துறை ரீதியான உறவுகள் நன்கு மலரத் தொடங்கியது. இந்தியாவின் புதுடில்லியிலுள்ள கொள்கைவகுப்பு ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்த பிரம்மா செல்லனியின் கூற்றைத் தெரிவிப்பதானால்: 'சிறிலங்கா உள்நாட்டுப் போரில் படைத்துறை ரீதியான இக்கட்டான நிலையை முடித்துவைப்பதில் சீனாவின் ஆயுத விநியோகம் ஒரு தீர்க்கமான காரணியாக அமைந்தது.' அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்க அனுதியளித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து, ஏப்பிரல் 2007 இல் ஒரு மிகப்பெரிய வெடிப்பொருட்கள் மற்றும் தளவாட ஒப்பந்தமொன்றை சிறிலங்காப் படைத்துறையோடு சீனா கைச்சாத்திட்டது. மேலும், பீஜிங் பல ஜெட் ரக படைத்துறை விமானங்களையும் சிறிலங்காவுக்கு இலவசமாகக் கொடுத்தது.
அம்பாந்தோட்டையில் சீனாவின் துறைமுகத்துக்கு கொழும்பு இணங்கியதை அடுத்து, ஈரானும் ரசியாவும் சிறிலங்காவுடன் தமது படைத்துறை உறவுகளைத் துரிதமாக மேம்படுத்தத் தொடங்கின. அந்தவகையில் பீஜிங், மொஸ்கோ மற்றும் தெகரான் உள்ளிட்ட சீனாவின் கூட்டணி நாடுகள் யாவும் சிறிலங்காவுடன் படைத்துறை உடன்படுகளையும் கூட்டு ஒத்துழைப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டன. தென்னிலைங்கைத் தலைவர்கள் மற்றும் படைத்துறை அதிகாரிகள் 2007 மற்றும் 2008 இல் தெகரான், மொஸ்கோ மற்றும் பீஜிங் ஆகியவற்றுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் நோக்கம், இந்த யுரேசிய நாடுகளின் உதவியோடு தமிழீழ விடுதலைப் புலிகளைப் படைத்துறை ரீதியாக வெற்றிகொள்வதற்கான தயார்ப்படுத்தல்களுக்கானதாகும். சீனா, ரசியா, ஈரான் ஆகிய நாடுகள் இறுதிக்கட்டப் போருக்கு அதிதீவிரமாக ஆயுத உதவியை சிறிலங்காப் படையினருக்கு வழங்கின.
இந்த சீனாவின் யுரேசியக் கூட்டு நாடுகள், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரை முடித்துவைப்பதன் நோக்கமானது, கொழும்புவில் எந்த ஆட்சிமாற்றத்துக்கான சாத்தியப்பாட்டைத் தடுப்பதற்கும் சீனாவின் துறைமுகம் கட்டியமைப்பதை உறுதிசெய்வதோடு சீனா, ரசியா, ஈரான் ஆகிய நாடுகளோடு கூட்டிணைந்துள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்வதற்கும் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தாம் ஒழித்துக்கட்டாவிட்டல், சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட சிறிலங்காவின் கடற் துறைமுக உடன்படிக்கை இரத்துச் செய்யப்படலாம்; சீனா சார்பு சிறிலங்கா அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும், சீனாவின் யுரேசியக் கூட்டணி வட்டத்திலிருந்து சிறிலங்காவை வசப்படுத்துவதற்கும் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட கூட்டணி நாடுகள் முயற்சிக்கக்கலம்; போன்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதை சிறிலங்கா அதிகாரிகளோடு ஈரான், ரசியா, சீனா ஆகிய அரசுகள் நம்பின. இந்தப் பின்னணியில்தான் 2009 போரின்போது சிறிலங்காவுக்குத் தமது பலத்தையும் வளத்தையும் வாரியிறைத்ததோடு, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சீனாவும் ரசியாவும் சிறிலங்காவைப் பாதுகாப்பதற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன.
பெலாருஸ் போன்று சிறிலங்காவும் 2009 இல் சங்காய்க் கூட்டுறவு அமைப்பில் (SCO) இணைந்துகொண்டது. இந்த யுரேசிய அமைப்புடனான சிறிலங்காவின் நுழைவு, ரசியாவின் யெகதிரின்பேர்க்கில் நடைபெற்ற சங்காய் கூட்டுறவு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கூட்டு ஆதரவை வழங்கியமைக்காக அந்த அமைப்புக்கு சிறிலங்கா நன்றி தெரிவித்தது. சிறிலங்கா, பெலாருஸ் ஆகிய இரு நாடுகளும் ரசியாவால் முன்னெடுக்கப்படும் கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பிலும் (CSTO) உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. சங்காய் கூட்டுறவு அமைப்புக்குள் ஓர் உரையாடல் பங்காளியாக (dialogue partner) சிறிலங்கா தன்னை இணைத்துக் கொண்டதால் ரசியா, சீனா, ஈரான் ஆகிய கூட்டணி நாடுகளோடு அதன் மூலோபாய உறவுகளை உறுதிப்படுத்துகின்றது.
இவ்வாறாக 21ஆம் நூற்றாண்டில் உலகமயமாகவிருந்த இரு துருவ வல்லரசுகளுக்கு இடையேயான போட்டியில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் நசுக்கப்படலாம் என்பதை முன்னுணர்ந்தே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 2002 இல் ஒரு நீண்டகாலச் சமாதானம் நோக்கி இடைக்காலத் தீர்வை முன்நிறுத்தி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நகர்த்தியிருந்தார். ஆனால், அது வல்லாதிக்க நாடுகளின் நலன்களைப் பாதிக்கின்ற விடயமாக இருந்ததால், அப்போது அமெரிக்கா வேண்டுமென்றே தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, சிங்கள தேசத்தின் நலன்களுக்கு அமைய சிங்களவர்களால் வழங்கப்படும் எந்தத் தீர்வுக்கும் உடன்படவேண்டுமென அச்சுறுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே போருக்குள் தள்ளியது. பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதைக் காட்டிலும் தமது நாடுகளின் தேசிய நலன்களே முதலானது என எண்ணிய வல்லாதிக்க நாடுகளுக்கு மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் ஒன்றுபட்டு தமது சொந்த இனத்தின் பூர்வீக உரிமையைச் சாவுக்கும் மேலாக மதித்துப் போரிட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பு, சர்வதேச வல்லரசுகளால் நிச்சயிக்கப்பட்ட ஒரு கசப்பான உண்மை. 2006 இல் இருந்து 2009 வரையான மூன்று ஆண்டுகள் கொண்ட, ஒரு நாள்கூட இடைவிடாத, இலங்கையின் சக்திக்கு அப்பாற்பட்ட ஓர் உலகப் போரை தமது சொந்தப் பலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்கொண்டனர். உண்மையில் அது ஓர் உலகப் போர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இறுதி மூச்சுவரை தாம் வரித்துக்கொண்ட கொள்கையில் இம்மிகூடப் பின்நிற்காது களத்தில் நின்று போரிட்டு மடிந்தனர். எந்த வல்லாதிக்க சக்திகளுக்கும் அடிபணியாது, தமிழ் மக்களின் உரிமைக்கான சத்தியப் போரில் தம்மையே அழித்து வரலாறு ஆகினர். சத்திய இலட்சியத்தில் தம்மையே அழித்த மாவீரர்களதும் எமது மக்களதும் தியாகம் என்றுமே வீண்போகாது.
முள்ளிவாய்க்கால் அழிவைத் தந்த அந்த இரு துருவ வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பூகோள அரசியற் போர் ஒரு நாள் இலங்கைத் தீவில் இரு துருவங்களாகி, அதுவே தமிழீழத்தைப் பெற்றுத்தர வழிசமைக்கும் என்பது திண்ணம். இன்றைய சூழலில், பூகோள அரசியல் மற்றும் இராசதந்திர அறிவில் நுண்ணறிவுமிக்க தலைவர்களாலே தமிழரின் விடுதலைப் போராட்டத்தைச் சரியாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
- த.ஞா.கதிர்ச்செல்வன்.
