இன்று (26/02/2017) உடல்நலக்குறைவால் தாயகத்தில் சாவடைந்துள்ள தமிழீழத்தின் புகழ்மிக்க, தலைசிறந்த புரட்சிப் பாடகர் திரு.சாந்தன் அவர்களுக்கு எமது உயர்ந்த மரியாதை வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறோம்!
எமது இதயக் கோவில்களாக விளங்கும் மாவீரர்களைப் போற்றிப்பாடிய பெருமான்!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அத்தனை சாதனைகளையும் தன் புரட்சிக் குரலில் பாடலாக அனைத்து தமிழ்மக்களின் மனங்களிலும் ஒலித்த புகழ்மிக்கவர்!
இன்னும் பல சந்ததிகளுக்கு உணர்வுபூர்வமாக உணர்வெழுச்சி கொள்ளத் தனது பலநூறு புரட்சிப் பாடல்களை விட்டுச்சென்றிருக்கும் தமிழீழ வரலாற்றில் முதன்மை பெற்ற பாடகன் இன்று எம்முடன் இல்லை.
தமிழீழ விடுதலையைத் தன் மூச்சாகவும் குரலாகவும் கொண்டு விளங்கிய எழுச்சிக்குரல் திரு.சாந்தன் அவர்கள், தமிழீழ விடுதலைக்கு அளப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழ் மக்களையும் மொழியையும் மாவீரர்களையும் போராளிகளையும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் ஆழமாகக் காதலித்த ஒரு கலைஞனை இன்று தமிழர் தேசம் இழந்துநிற்கிறது!
தனது மகன்கள் இருவரைப் போராட்டத்துக்காக ஒப்படைத்து, அவர்களை மாவீரர்களாகப் பார்த்த ஒரு வீரத் தந்தை திரு. சாந்தன் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். இந்த உயரிய கலைஞனைப் போற்றி தமிழீழமெங்கும் வணக்கமரியாதை செய்ய இன்று சூழல் இல்லை. இருந்தாலும், தமிழ் இனத்தின் வீரத்தையும், மாவீரர்களையும், தேசியத் தலைவரையும் தனது மூச்சுக் குரலால் உயிர்த்துவமாகப் பாடியுள்ள தமிழீழத்தின் இந்த உயர்ந்த கலைஞனை, எமது விடுதலைப் போராட்டத்துக்காகவே வாழ்ந்த ஒரு நாட்டுப் பற்றாளனை தமிழர்தேசம் என்றும் சுமந்து பயணிக்கும்.
மாவீரர்கள், இந்த மாமனிதனின் பாடல்களை என்றும் கேட்டு இரசிப்பார்கள்!
அன்னாருடைய இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
நன்றி.
த.ஞா.கதிர்ச்செல்வன்.