மேதகு நிகழ்வு குறித்து தமிழ்த் தேசிய கலைப் பண்பாட்டுப் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0


அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் "தமிழ்த் தேசிய கலைப் பண்பாட்டுப் பேரவை" என்ற அமைப்பு தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்வைக் குழப்புபவர்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை இங்கே படிக்கலாம்:

வணக்கம்,
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை அவுஸ்ரேலியாவின் பெருநிலப்பரப்பான மேற்கு அவுஸ்ரேலியாவில் தேசிய நிகழ்வுகள் மற்றும் தமிழர் கலை, பண்பாட்டு அம்சங்களை முன்னெடுத்து வரும் அமைப்பாகும். அத்துடன் தமிழ்த் தேசிய நிகழ்வு ஒழுங்கமைப்பு மற்றும் செயற்பாடுகளுக்காக அவுஸ்ரேலிய நாட்டின் ஏனைய அமைப்புகளுடன் தொடர்புகளை பேணி பல வருடங்களாக மிகவும் நேர்த்தியான முறையில் தனித்துவத்துடன் இயங்கிவரும் அமைப்பாகும்.

வீரவணக்க நிகழ்வு – பதினாறு வருடங்களுக்கு முன்னர் இனவிடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு என்பது இதுவரை அமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. தமக்காக போராடி உன்னத தியாகத்தை புரிந்த தமது தலைவருக்கான தமது மரியாதையை செலுத்துவதற்கான உரிமை மக்களுக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் உள்ளது. இந் நிலையில் தமிழீழ மாவீரர் பணிமனையால் கடந்த 10.03.2025 அன்று காலக்கடமை எனும் கட்டமைப்பின் தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பான ஆய்வறிக்கையின் மூலமான வீரச்சாவு அறிவித்தல் வெளியானது. அதை தொடர்ந்து எமது நிர்வாகத்தினரின் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு அமைவாக பேர்த் (மேற்கு அவுஸ்ரேலியா) நகரில் நிகழ்வுக்கான முன்னேற் பாடுகளை மேற்கொள்ள முனைந்தோம்.

முதற்கட்டமாக அவுஸ்ரேலிய ஏனைய மாநில செயற்பாட்டாளர்களுடன் கடந்த பல மாதங்களாக கலந்துரையாடி ஒருமித்து இந் நிகழ்வை நடாத்த எம்மாலான முயற்சிகளை செய்துவந்தோம். ஏனைய மாநிலங்களிலும் இந் நிகழ்வை செய்வதற்கு தமிழ்த் தேசிய அமைப்புக்கள் முன்வந்த போதும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள ஒருசிலரால் அவ் அமைப்புக்களில் குழப்பங்களை விளைவித்து தொடர்ந்தும் இந் நிகழ்வை நிறுத்துவதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவுஸ்ரேலியா ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு கண்டம் என்பதை யாவருக்கும் நினைவுபடுத்துகின்றோம்.

இந் நிலையில் தமிழர் வாழும் தேசம் எங்கும் எதிர்வரும் 02.08.2025 அன்று இடம்பெறவிருக்கும் வீரவணக்க நிகழ்வை மேற்கு அவுஸ்ரேலியாவிலும் அதே நாளில் செய்வது தொடர்பாக எமது அமைப்பினர் தீர்க்கமான ஒரு முடிவை எட்டியிருந்தனர். இறுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக நடந்த சில இணையவழி சந்திப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகள் சார்பாக எம்முடன் கலந்துரையாடியோர் வாயிலாகவும் எம்மிடம் தேசியத் தலைவரின் வணக்க நிகழ்வு தொடர்பாக தமது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தனர்.

அதனை சுருக்காமாக இங்கு தெரிவிக்க விரும்புகிறோம். ‘’தாமும் நிகழ்வு செய்ய விரும்புவதாகவும் எல்லா மாநிலத்திலும் ஒற்றுமையாக அடுத்த ஆண்டு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வை நிறுத்தும் படியும் கோரி’ இருந்ததுடன் அதற்கான எவ்வித உத்தரவாதமும் அவர்களால் வழங்கப்படவில்லை. மாறாக மேற்கு அவுஸ்ரேலியா மற்றும் மெல்பேண் நகரிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வுகளை நிறுத்துவதில் மட்டும் அக்கறையாக இருந்ததை அவர்களின் கருத்தாடல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. இவ்விடயம் தொடர்பாக எமது தரப்பிலும் ஆலோசனைகளை கேட்டு ‘’குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று இன்னும் சில (மூன்று) வாரங்கள் உள்ள நிலையில் நாம் அதை இடைநிறுத்துவது எமது மக்களிடம் மேலும் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தும், அந் நிகழ்வை நாம் குறித்த நாளில் முன்னெடுப்பதே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்தோம் அக்கருத்தை ஏனைய மாநில செயற்பாட்டாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

இந்;நிலையில் 22.07.2025 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அவுஸ்ரேலியா என்ற தலைப்பில் சிட்னி, மெல்பேண் ஆகிய இருமாநிலங்களில் இயங்கிவரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மேற்படி நிகழ்வை நிறுத்தும் விதமான ஒரு அறிக் கையை வெளியிட்டு மக்களை குழப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளமை மிக மனவருத்தமானது. “தமிழர் ஒருங்கிணைப்பு குழு” தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் இக்கட்டமைப்பு தாயகத்திற்கான உதவிகள் மற்றும் போர்

உச்சம் பெற்ற காலத்தில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அறவழிப் போராட்டங்கள் என்பன அளப்பரியவை ஆனால் 2009க்கு பின்னர் ஒரு சிலரது கைகளில் சிக்கி இவ் அமைப்பின் போக்கை தீர்மானிக்கும் விடயம் மக்களின் விமர்சனத்திற்கும் விரும்பாமைக்கும் உள்ளாக்கி இருப்பது யாவரும் அறிந்ததே.

எமது தலைவர் இல்லாமையை ஏற்று அவருக்குரிய மதிப்பளிப்பை செய்ய விரும்புவோரை குழப்ப நினைக்கும் இவ் அமைப்பில் உள்ள சிலர் கடந்த வருடங்களில் தலைவர் இருக்கிறார் தலைவரின் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்று பல்வேறு குழப்பத்தினை ஏற்படுத்தியோர் பற்றி மௌமாகவே இருந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டில் தலைவரின் குடும்பம் மற்றும் தலைவரின் இருப்பு தொடர்பான கருத்துக்களை கூறி பெரும் மோசடிகளை செய்தவர்கள் இதே ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சிலர் என்பதையும், தலைவர் இருப்பு தொடர்பான வதந்திகள் இங்குள்ள ஒரு தமிழ் வானொலி ஊடாகவே கடத்தப்பட்டது என்பதையும் யாவரும் அறிவர். இச் சந்தர்ப்பத்திலும் மக்களை தெளிவுபடுத்தி அச்சதியை முறியடிக்க நாம் எடுத்த முயற்சிக்கும் இக்குழு செவிசாய்க்கவில்லை. ஆனால் தலைவருக்கான வணக்க நிகழ்வை புறக்கணிக்க கோரி ஒவ்வொரு நாட்டிலும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு மக்களை குழப்புகின்றனர். இதிலிருந்து தலைவரால் உருவாக்கப்பட்ட இவ் அமைப்பின் தற்போதைய தலமைத்துவங்கள் அல்லது முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் பற்றி மக்கள் விழிப்படைய வேண்டும்.

தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையும் தாயகத்துக்கான தனது பணிகளை விளம்பரமின்றி மாநில மக்களின் ஒத்துழைப்புடன் செய்துவருகிறது என்பதை கூறிக்கொள்கிறோம். நாம் அவற்றை இங்கு பட்டியலிட விரும்பவில்லை. மக்களை குழப்பும் விதமான செயற்பாடுகளுக்கான விளக்கமாகவே இத்தெளிவுபடுத்தலை தங்கள் முன் வைக்கின்றோம்.

அன்பார்ந்தவர்களே! நாம் எமது தமிழினத் தலைவருக்கான நிகழ்வு ஒழுங்கமைப்பை மிகவும் அமைதியான முறையில் முன்னெடுத்துவரும் இவ் வேளையில் யதார்த்தத்திற்கு புறம்பான கருத்துக்களை கூறி இந் நிகழ்வை குழப்ப முனைவது மிகவும் வருத்தமானதாக இருக்கின்றது. தமிழினத் தலைவர் ஒரு அமைப்புக்கோ அல்லது குழுவிற்கோ சொந்தமானவரல்ல தமிழினத்திற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் கொடையாக்கிய அம்மாபெரும் தியாகத்தை போற்றித் துதிப்பது தமிழ ராகிய ஒவ்வொருவரின் கடமை. இக்கடமையை செய் என்றோ செய்ய வேண்டாம் என்றோ யாரும் கட்டாயப்படுத்தவோ அதி காரம் செலுத்தவோ முடியாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்துடன் 02.08.2025 அன்று இடம்பெற விருக்கும் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் அவுஸ்ரேலிய கிழக்கு மாநிலங்களின் மத்தியில் அமைந்துள்ள மெல்பேண் நகரிலும் மேற்கு அவுஸ்ரேலிய மாநிலமான பேர்த் நகரிலும் கலந்து கொண்டு தங்கள் வீரவணக்கத்தை செலுத்தலாம். ஏனைய மாநிலங்களில் இருந்து நிகழ்வில் கலந்துகொள்ள பேர்த் நகருக்கு வருவோருக்கான தங்குமிட ஏற்பாடுகள் பேரவை நிர்வாகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

இந்நிகழ்வை செய்வதற்கான கால அவகாசமும் வசதிகளும் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. எனவே மேற்படி குழப்ப நிலைகளை புறந்தள்ளி நிகழ்வின் கனதியை கருத்தில் கொண்டு ஒழுங்கமைப்புகளை செய்ய விரும்புவோர் செய்யலாம் என்பதே எமது நிலைப்பாடு. மக்கள் தம் தலைவனுக்காய் தன்னெழுச்சியாக கலந்து கொண்டு அவருக்குரிய மரியாதையை செய்ய திண்ணமாய் உள்ளனர். ‘’எம் தேசியத் தலைவரை மனதில் இருத்தி முன்னெடுக்கும் காரியத்திற்கு மாவீரர்கள் துணையிருப்பார்கள்’’. ‘’விசமப் பரப்புரைகளுக்கு செவிசாய்க்கும் இனம் விழிப்படையாது, தனது தலைவனுக்கான மரியாதையை செய்ய துணியாத இனம் விடுதலை பற்றி சிந்திப்பது சாத்தியமில்லை’’.
‘’நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்’’

நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை
மேற்கு அவுஸ்ரேலியா.

‘’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’

http://tamilnacc.net.au/2025/07/24/vanakkanekalvu/



Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!