டிட்ட்வா (Ditwah) புயலின் தாக்கத்தில் கொட்டிய கனமழையால் இலங்கையின் பல பகுதிகள் கடும் வெள்ளப் பேரிடர் அழிவுகளைச் சந்தித்துள்ளன. வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கம்பஹா, கொழும்பு, புத்தளம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் வீடுகள், சாலைகள், சொத்துகள், விலங்குகள், பயன்தரு மரங்கள் மற்றும் விவசாயங்கள் விவசாய நிலங்கள் என அனைத்தும் மிகப் பெரும் அழிவுகழுக்கு உள்ளாகியுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பேரிடர் மேலாண்மை அறிக்கைகளின்படி, 25 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பதிவாகியுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இந்த இடர் நிலைமைக்கு எதிராக, நவம்பர் 28 ஆம் தேதி முதலே தாயகச் செயலணி அவசர நிவாரண நடவடிக்கைகளை தாயகம் முழுவதும் தீவிரப்படுத்தியது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், கல்லடி பகுதிகளிலும் திருகோணமலையின் ஈரல்குழி, ஆலங்கேணி, திரியாய், இரணைக்கேணி, வெருகல் பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கந்தபுரம், பொன்நகர், அறிவியல்நகர், வேதாகுடியிருப்பு ஆகிய இடங்களிலும் மக்கள் அடைந்த இடரைக் குறைக்க உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை அப்பகுதி மக்கள் நன்றியுடன் பெற்றுக்கொண்டனர். மலையகத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொட்டலங்கள் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாவீரர் பெண் தலைமைத்துவத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு, தாலா ரூ. 3,660 பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்திலும் விசுவமடு, பாலிநகர், துணுக்காய், மல்லாவி பகுதிகளில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த 200 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தாலா ரூ. 3,600 பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தின் ஈரல்குழி கிராமத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன, மேலும் இரணைக்கேணி பகுதியில் இடம்பெயர்ந்த 55 குடும்பங்களுக்கு தலா ரூ. 5,500 பெறுமதியான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதேசமயம் வெருகல் பகுதியில் ரூ. 2,00,000 ரூபாய் பெறுமதியான மருத்துவ அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி சுகாதாரத் தேவைகளை இந்த உதவிகள் பூர்த்தி செய்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கன்னங்குடா, கொத்தியாபுலை, கரையாக்கன்தீவு, தேவபுரம் ஆகிய பகுதிகளில் 400 குடும்பங்களுக்கு தால ரூ. 2,500 மதிப்பிலான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மன்னார் மாவட்டத்தின் ஆண்டான்குளம், பாலடி, புதுக்குளம் பகுதிகளிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், வீடு திரும்ப முடியாமல் கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்த 600 மாணவ-மாணவியருக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைத் தேவைகள் குறித்த தகவல்கள் நேரடியாக பெறப்பட்டு, தொடர்புடைய பொருட்கள் பொதி செய்து வழங்க தயாராக உள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படும் இந்த நேரத்தில், தாயகச் செயலணியின் உதவி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விரிவாக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பேரிடர் உதவி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் தாயகச் செயலணி, முதற்கட்ட உதவிகளை வழங்கிய போராளிகள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த நிவாரணப் பணிகள் தொடர வேண்டும் என்பதற்காக மேலும் உதவி வழங்க முன்வருமாறு உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பும் வரை, வாழ்க்கையை மீண்டும் அமைத்துக்கொள்ளும் வரை, இந்த உதவிகள் தடைப்படாமல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.