அனுர ஆட்சியில் ஸ்ரீலங்கா காவல் துறையினுடைய அடக்குமுறை / ஒடுக்கு முறை

TGK
0



கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக தையிட்டியில் அப்பாவி பொதுமக்களின் காணிகளை அபகரித்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் அனுசரணையோடு அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ ரஜ மகா விகாரைக்கு எதிரான சனநாயக ரீதியிலான போராட்டம் காணி உரிமையாளர்களின் வழிநடத்தலில் இடம்பெற்று வருகிறது.

குறித்த சனநாயக வழியில் இடம் பெற்று வரும் போராட்டத்தில் பங்குபெற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பலாலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் B அறிக்கை மூலம் திரிபுபடுத்தப்பட்ட தவறான பொய்யான தகவல்களை கொண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் ஒரு வழக்கு தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடும் பாதிக்கப்பட்ட மக்களை பிணை வழங்க முடியாத சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சமவாயச் சட்டத்தின் (ICCPR) கீழ் கைது செய்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறை 77 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் சூழலில் அதற்கு எதிராக அஹிம்சை போராட்டம் ஆயுதப் போராட்டம் என அனைத்து வழிகளிலும் போராடி வந்த நிலையில் இறுதியாக தற்போது எம்மிடம் மீண்டும் கையளிக்கப்பட்டிருக்கின்ற போராட்ட வழிமுறை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இந்த சனநாயக ரீதியிலான போராட்ட வழிமுறையே.
இது சிலருக்கு வாக்கு அரசியலாக தெரியலாம். இன்னும் சிலருக்கு உசுப்பேற்றும் அரசியலாக விளங்கலாம்.
மிதவாதிகள் இதனை இனவாத அரசியலாகவும் சுட்டலாம். இந்தப் போராட்டங்களை தேவையில்லை என்றால் தொடர்ந்தும் தமிழினத்தை இன அழிப்புச் செய்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒற்றை முகமாக தெரியும் இந்த அரசுக்கு எதிராக போராடும் வழிமுறைதான் என்ன? வடகிழக்கு தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பையும் இனப்பரம்பலையும் தனது தொடர் இனவழிப்பு நடவடிக்கைகள் மூலம் மாற்றமுனையும் ஸ்ரீலங்கா அரசின் இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடவே தேவையில்லையா? இல்லையேல் ஸ்ரீலங்கா பௌத்த பேரினவாத அரசுக்கு எங்களுடைய எங்கள் தாய் நிலத்தை தாரைவார்த்து விடலாமா?
போராட்டக்காரர்களை தாராளமாக விமர்சியுங்கள். அது உங்கள் சனநாயக உரிமையும் கூட. குறித்த சிலர்தான் போராடுகிறார்கள் என்றால் அவர்கள் உங்களுக்காக போராடவில்லையா? இந்த ஆக்கிரமிப்பு ஒட்டுமொத்த தமிழினத்திற்கு எதிரானது இல்லையா? 77 வருடங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாதம் இந்த ஆக்கிரமிப்பைத் தானே செய்து வருகிறது. இவர்கள் போராடதுவிட்டால் ஆக்கிரமிப்பு நின்று விடுமா?
நேற்றைய தினம் (04/12/2025) தையிட்டியில் இடம்பெற்ற சனநாயக வழியிலான காணி மீட்புப் போராட்டத்தை போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் வகையில் வல்வெட்டித்துறை அச்சுவேலி நெல்லியடி இளவாலை காங்கேசன்துறை தெல்லிப்பளை பலாலி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிசார் சட்டத்தை கையில் எடுத்து மிலேச்சத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் மிருகத்தனமாகவும் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி இருந்தனர்.
பொதுமக்கள் மீதான ஸ்ரீலங்கா போலீசாரின் குறித்த வெறித்தனமான தாக்குதல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது முறைப்பாட்டை தாக்குதலை நடாத்திய பலாலி பொலிசாரிடமே செய்வதா? அல்லது குறித்த பொலலிஸ் நிலையங்களை வழிநடத்தும் ASPயிடம் முறையிடுவதா? அப்படியானால்
தாக்குதலை நடத்தியவர்களே விசாரணையை எப்படி மேற்கொள்ள முடியும்?
நேற்று எம் மீது நடத்திய தாக்குதலை மேற்கொண்ட பலாலி போலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக இன்றைய தினம் காலை 8 மணிக்கு பலாலி போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கோரிய அறிவித்தல் ஒன்றை நேற்றைய தினம் மாலை தாக்குதல் நடத்திய சில மணித்தியாலங்களுக்குள்ளேயே எனது முகவரிக்கு சேர்த்துள்ளார்.
இந்த ஒடுக்கு முறைகளில் இருந்து நாங்கள் மீண்டாக வேண்டும் என்றால் இனமாக நாங்கள் ஒன்றாதல் வேண்டும்.
அ) போராடும் காட்சி - படம் 1
ஆ) போராட்டத்தை அடக்கிய காவல்துறை -படம் 2
இ) வாக்குமூலத்திற்கான அறிவித்தல் படம் 3
நடராஜர் காண்டீபன்




Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!