தமிழ் இனத்தின் விடுதலையை ஆழமாக நேசித்தவரும், வெளியில் தெரியாத உள்ளரசியல் நகர்வுகளில் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியவருமான முனைவர் திரு.ம.நடராசன் ஐயா அவர்கள் இன்று மண்ணுலகை விட்டு மறைந்த செய்தி தமிழ் அரசியல் அரங்கை உலுப்பிவிட்டுள்ளது!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மாவீரர்களையும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் உச்சமாக மதித்து, ஆழ்மனத்தில் நேசித்தவர் ஐயா திரு.ம.நடராசன் அவர்கள். தமிழீழ விடுதலைக்கான உள்ளகச் செல்வாக்கு அரசியல் நகர்வுகளை மிகவும் சாணக்கியத்தோடு தமிழ்நாட்டில் மறைமுகமாக முன்னெடுத்துவந்த ஓர் உள்ளரங்க அரசியலாளரை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தமிழ் இனம் அழித்தொழிக்கப்பட்ட போது செய்வதறியாது, அதனைத் தடுத்துநிறுத்த வழியில்லாது, பலமில்லாது, பொறுக்கமுடியாது துடிதுடித்தார் ஐயா. அதனைத் தடுத்து நிறுத்தும் பலத்தில் இருந்தவர்கள் அதனைத் தடுக்காது தமிழின அழிப்புக்குத் துணைபோனமைக்கு எதிராக, அந்த துணைபோன கட்சிகளை ஒழிப்பதற்காக தீவிரமாகச் செயற்பட்டார். தமிழ் இனத்தின் வரலாற்றில் நடந்த பெரும் இனஅழிப்பை தமிழர்கள் எக்காலத்திலும் மறக்காது, அதனை மனதில் இருத்தி தமிழ் இன விடுதலைப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனைக்கு அமைய, தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் முற்றம் நிறுவுவதற்காகத் தனது பெரும் பங்களிப்பை வழங்கினார்.
தமிழீழம் நிச்சயம் விடுதலை பெறும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்ததோடு, அதனைச் சாத்தியப்படுத்துவதற்கு உலகெங்குமுள்ள 12 கோடி தமிழர்களும் ஒன்றுபட்டு, ஒரே நோக்கத்துக்காகச் செயற்பட்டாலே முடியும் என ஆணித்தரமாகக் கருத்துரைத்தார். அதேவேளை, தமிழீழத்தின் விடுதலையில்தான் தமிழ்நாடும் இந்தியாவும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை திடமாக நம்பினார்.
அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் விதமாகவே அன்னாருடைய உள்ளரங்க அரசியல் நகர்வுகள் அமைந்திருந்தன. தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் இனப்படுகொலைத் தீர்மானம், தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, இனஅழிப்பைச் செய்த சிங்கள அரசுக்கு இந்திய மத்திய அரசு உதவக்கூடாது, இனப் படுகொலையாளிகளை பன்னாட்டு நீதிமன்றில் நிறுத்த வேண்டும், சிங்கள சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் மறைமுகமான உள்ளரங்க அரசியல் நகர்வுகளில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியவர் திரு.ம.நடராசன் அவர்கள்.
இப்படிப்பட்ட ஓர் உள்ளரங்க செல்வாக்கு அரசியல் சாணக்கியனின் இழப்பு இன்றைய சூழலில் தமிழர்களுக்கு ஈடுகட்ட முடியாத ஒன்றாகும்!
முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் தனது இளமைக் காலம் முதலே தமிழ் மொழியை பாதுகாப்பதற்கான போராட்டங்களில் பங்குகொண்டது மட்டுமன்றி, இந்தி எதிர்ப்பு போராட்டங்களையும் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார். அவர் தனது 74 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் இறந்தாலும், அன்னாரின் புகழ் தமிழ் உலகில் நீண்டு நிலைத்திருக்கும்.
உள்ளரங்க அரசியலாளர் முனைவர்.திரு.ம.நடராசன் அவர்களுக்கு எமது வணக்க மரியாதையைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.
***
ஆண்டு 2014 கனடாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அவர் ஆற்றிய உரையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்: