சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது இன்றைய தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கையெழுத்துப் போராட்ட ஊர்திகள் சொம்மணிக்கு வரவழைக்கப்பட்டு, சொம்மணியில் ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மதகுருமர், பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என அங்கே கூடிய அனைவராலும் அங்கு படுகொலை செய்து புதைக்கப்பட்ட எமது அப்பாவித் தமிழ் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, தாயகச் செயலணியின் இணைப்பாளரான திருமதி. ஜெயச்சித்திரா அவர்களால் இந்தப் போராட்டம் தொடர்பான விளக்கம், போராட்டத்தின் நோக்கம், கையெழுத்துப் போராட்டத்தில் ஒழுங்கு முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர், ஐ.நா.சபைக்கு அனுப்பப்படும் அந்த அறிக்கை முழுமையாக அங்கு வாசிக்கப்பட்டது.
அதன் பின் கையெழுத்துப் போராட்டம் அங்கு சொம்மணியில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தொடரணியாக நல்லூர் பகுதிக்குச் சென்று, அங்கே தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தி, நல்லூர் பகுதியிலும் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றுது. யாழ் மாவட்டத்துக்குரிய ஊர்திகள் யாழ் நல்லூர் பகுதி மற்றும் பிரதான நகரப் பகுதிகளிலெல்லாம் சென்று கையெழுத்து சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டன.
அதேபோல் பிற மாவட்டங்களுக்குரிய ஊர்திகள் அந்தந்த மாவட்டங்களுக்கு கையெழுத்துச் சேகரிப்பு போராட்டத்துக்காக நகர்ந்தன. சம நேரத்தில், தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் இந்த கையொப்பம் சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது.