தியாக தீபம் திலீபன் அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகூரும் முகமாக தாயகத்தில் இன்று (20.09.2025) விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
"தியாக தீபம் திலீபன் நினைவுக் கிண்ணத்துக்கான" விளையாட்டுப் போட்டிகள் மன்னார் மாவட்டம் மாந்தைப் பிரதேசத்துக்கு உட்பட்ட வேட்டையன் முறிப்பு கிராமத்தில் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆறு (6) கிராமங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
மாவீரர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், பெற்றோர்கள் மற்றும் தாயக உறவுகள் முன்னிலையில் இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. லெப்ரினன்ட் கேணல். கரன் அவர்களது மகள் பொதுச் சுடர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மாவீரர் குமிழ்தினியின் தாயார் ஈகைச் சுடர் ஏற்றினார்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்துக்கு மாவீரர் புலிவேந்தன் அவர்களின் சகோதரி மலர்மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, இதுவரை காலமும் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த அனைத்து மாவீரர்கள், நாட்டுப் பற்றாளர்கள், மாமனிதர்கள் மற்றும் இனஅழிப்புக்குப் பலியான அப்பாவிப் பொதுமக்கள் ஆகியோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து "தியாக தீபம் திலீபன் நினைவுக் கிண்ணத்துக்கான" விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
யாழ் மாவட்டத்தின் ஊரெழு எனும் ஊரில் நவம்பர் 27, 1963 இல் பிறந்தார் திலீபன் அவர்கள். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்தார். கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பன்னிரெண்டாம் நாள் செப்டம்பர் 26 1987 இல் ஈகைச் சாவைத் தழுவிக்கொண்டார் லெப்ரினன்ட் கேணல். திலீபன் அவர்கள்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவெழுச்சியோடு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒழுங்கமைப்புகள் தாயகச் செயலணி என்னும் அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.